வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்....இப்படி ஒரு பெயரில் படம். மக்களின் Unconscious Mind இல் மிகவும் ஆழமாக பதிந்துள்ள ஒரு அபிப்பிராயத்தையே படத்தின் பெயராக வைத்த புத்திசாலித்தனத்தை மெச்சாமல் இருக்கவே முடியாது. அதே சமயம் கொஞ்சம் அமைதியை கிளறி விடும் சமுகநீதி provoking வாசமும் இந்த பெயரில் மறைந்திருக்கிறது.
நகைச்சுவை படம் போல தெரிந்தாலும் அடிப்படையில் இது ஒரு feel good மூவிதான். இவ்வளவு சுத்தமான ஒரு அழகான ஒரு படம் தமிழில் மிகவும் அபூர்வமாகதான் வரும். இதில் ஆபாசமான ஒரு காட்சியும் இல்லை. சண்டைகள் வன்முறை போன்றவை கொஞ்சம் இருந்தாலும் எந்த காட்சியும்
மனதை உறுத்தும் அளவுக்கு இல்லவே இல்லை. பலகாட்சிகளில் எங்கே வழக்கமான பயங்கர சண்டை குருர காட்சிகள் வந்துவிடுமோ என்று பயப்பட வைத்து கொஞ்சம் கூட அபஸ்வரம் தட்டாமல் கத்தி மேல் நடப்பது போல
காட்சிகளை அமைத்துள்ளார்கள்.
சமுகத்தில் பலரும் ஏதாவது ஒரு இடத்தில கொஞ்சம் பாதை தடுமாறி தவறான பாதையில் பயணம் செய்யத்தான் நேரிடும். அவர்களின் தடுமாற்றம் பயத்தை கொடுக்கும் அதை காட்டி அவர்களை மிரட்டி ஒருவர் மீது ஒருவராக தொடரும் சங்கிலி தொடர் இறுதியில் எங்கே போய் நிற்கிறது? இந்த சங்கிலி முடிச்சுகள் அறிவார்ந்த முறையில் காட்சி
படுத்துவது எளிதான காரியம் அல்ல.
கதாசிரியர் வசனகர்த்த இயக்குனர் எடிட்டர் இன்னும் பின்னணியில் இதன் உருவாக்கத்துக்கு எல்லோரும் மிகவும் கடுமையாக வேலை செய்துள்ளார்கள்.
இசையமைப்பாளர் மிகவும் அடங்கி தேவைக்கு ஏற்ப மட்டும் காட்சிக்கு தேவையான உணர்ச்சியை வழங்கியதை பாராட்டவே வேண்டும்.
நடிகர்கள் எல்லோரும் ஓரளவு அந்த பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்கள்.
இந்த படத்தில்தான் சுமார் நாற்பது கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஏனோ
அத்தனை நடிகர்களும் ஞாபகத்தில் வருமளவு ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை அதாவது characterization பாத்திரப்படைப்பு அழுத்தம் திருத்தமாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக எந்த படத்திலும் இவ்வளவு துல்லியம் காணப்படவில்லை.
ஒரு நல்ல இளைஞன் அவசர பணத்தேவைக்காக செய்யும் காரியம் எங்கே போய் நிற்கிறது என்பதுதான் கதையின் ஒன்லைன்.
சமுகத்தில் பெரும்பாலோர் கொஞ்சம் சட்ட விரோத காரியங்கள் செய்ய தயாராகவே உள்ளார்கள் என்பதுதான் இன்றைய கசப்பான சமுக உண்மை.
இந்த சமுக அவலத்தை கொஞ்சம் கூட பிரசார நெடியே இல்லாமல் எடுத்து காட்டியது பாராட்ட படவேண்டியது .
பக்கா மசாலா படம் போல தெரிந்தாலும் அதை எல்லாம் மீறி தந்தையாக நடிக்கும் ஜெயப்பிரகாசின் பாத்திரப்படைப்பும் அதை அவர் கையாண்ட விதமும் படத்தை ஒரு தந்தை மகன் பாசம்தான் படத்தின் மைய கதையாக தூக்கி நிறுத்தி விட்டது .
சர்மா வர்மாவாக வரும் இருவரும் பேசிக்கொள்ளும் சுவாரசியமான காட்சிகள் எல்லாம் தமிழ் படம்தான் பார்க்கிறோமா என்ற அளவில் ஒரு ஒரிஜினல் பாத்திரப்படைப்புகள்.
ஒரு தராதரம் மிக வில்லனாக வரும் ஆடுகளம் நரேன் இறுதி காட்சிகளில்
நடிப்பில் ஜெயப்பிரகாஷோடு போட்டி போட்டு படத்தை ஒரு அந்தஸ்து உள்ள படமாக மாற்றி விட்டார்.
இரு நடிகர்களின் ஆளுமையும் அபாரம்
அற்புதமான நடிகர்களை வைத்து ஒரு வகை சதுரங்க கதையை மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டும் என்று தோன்றும் விதமாக படமாக்க பட்டிருக்கிறது.
படத்தின் பல காட்சிகள் சர்வேதேச தரம் வாய்ந்தவை.
ஒரு மசாலா படம் இவ்வளவு மூளைக்கு வேலை கொடுக்கிறது என்பதே இதன் பிரமாண்ட வெற்றிதான்.