Monday, November 5, 2018

தமழ் சினிமாவில் பொற்காலம் ..... எண்பதுகள்தான்


Shalin Maria Lawrence : தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பொற்காலம்
என்றால் அது எண்பதுகள்தான்.தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக தன் நாடாகத்தன்மையில் இருந்து யதார்த்த சினிமாவிற்கு மாறி கொண்டிருந்த காலம் அது.ஒரு பெண் தன் ஒப்பனையெல்லாம் களைத்து இயல்பு நிலையில் எவ்வளவு எளிமையாக இருப்பாளோ அத்தனை எளிமையும் ,ரசனையும் ,ரம்மியமுமாக இருந்தது தமிழ் சினிமா அப்பொழுது. உதாரணத்துக்கு நடிகை ஷோபாவை போல . Simple ,fresh and deep.
எழுபதுகளின் கடைசியில் இருந்து என்பதுகளிளின் துவக்கம் வரை பல புது இயக்குனர்கள் புது கலைகளோடு தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக படர ஆரம்பித்தார்கள்.மகேந்திரன்,ஆபாவணன் ,பாலு மகேந்திரா ,கே.விஜயன்,பாரதிராஜா ,பாக்கியராஜ்,t. ராஜேந்தர் ,எஸ் எ சந்திரசேகர் என்று தமிழ் சினிமாவில் பூசி இருந்த டிஸ்டம்பரை கலரை அழித்து கொண்டிருந்தார்கள்...தங்கள் வண்ணங்களால் நிரப்பி கொண்டிருந்தார்கள்.
பல கலை படங்களை உருவாக்கினார்கள் ,எளிய மனிதர்களின் சினிமாவை உருவாக்கினார்கள்.
நண்டு ,மெட்டி ,உதிரி பூக்கள் ,பசி ,அவள் அப்படிதான் போன்ற art film பாணியில் உள்ள கலை படங்கள் ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் தண்ணீர் தண்ணீர் ,தூரத்து இடி முழக்கம் ,சட்டம் ஒரு இருட்டறை என்று மக்கள் அரசியல் பேசிய படங்கள்.
அந்த வரிசையில்தான் எண்பதுகளில் கம்யூனிசம் பேசிய படங்கள் அதிகம் வந்தன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் கம்யூனிசம் என்கிற வார்த்தை இந்த படங்களில் ஒரு இடத்தில் கூட வராது ஆனால் படம் முழுக்க கம்யூனிசம்,கம்யூனிசம் ,கம்யூனிசம் தான்.
சிவப்பு மல்லி ,வறுமையின் நிறம் சிவப்பு ,ஊமை விழிகள் என்று பல படங்கள் நேரிடையாகவோ ,இலைமறைகாயாகவோ கம்யூனிசத்தை பேசின..
அப்படி நேரிடையாக வந்த கம்யூனிச படம்தான் "கண் சிவந்தால் மண் சிவக்கும்".
கீழ்வெண்மணி சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தபட்டத்தில் நாம் அடிக்கடி சண்டை போட்டு கொள்ளும் "class+caste" சாதிய வர்க்க பிரச்னையை சிறப்பாக கையாண்டிருப்பார்கள். இதன் இயக்குனர் ஸ்ரீதர் ராஜனுக்கு இந்த படத்திற்காக ஒரு தேசிய விருது கிடைத்தது.
படத்தின் நல்லதொரு உச்சகட்ட இடத்தில் வரும் இந்த "மனிதா மனிதா " பாடலை நீங்கள் கேட்கவில்லை என்றால் வாழ்வில் ஏதோ ஒன்றை நிச்சியமாக இழந்திருக்கிறீர்கள்.
இந்த பாட்டு தமிழில் கார்ல் மார்க்ஸும் அம்பேத்கரும் ஒருவருடன் ஒருவர் பேசியது போல் இருக்கும்.சமூக சரவெடி.
இசை வேறு யாரும் இல்லை...விசில் அடிப்பவர்கள் எல்லாம் கம்யூனிச ரவடிகள் என்று போன வாரம் பேசிய கம்யூனிசத்தால் வாழ்வை பெற்ற இளையராஜாதான்.
தெறிக்கும் வரிகளின் சொந்தக்காரர்...வைரமுத்து.
அந்த காலத்தில் எல்லோரும் ஒழுங்காக தான் இருந்திருக்கிறார்கள் .என்பதுகள் அப்படி.
அப்பொழுது சுயத்தை மறக்காத இளையராஜாவும் ,அரசியலில் கலக்காத வைரமுத்துவுக்கு கோட்டை ஏறி கொடியை நாட்டிய பாடல்தான் இது.
சோவியத் கம்யூனிச இசை என்றழைக்கப்படும் பாணியை அப்படியே தமிழ் உணர்வோடு நமக்கு ஊட்டி இருப்பார் இளையராஜா. நோயாளிக்கு வாயில் ஊற்றிய க்ளுகோஸ் இந்த பாடல்.
சோவியத் கம்யூனிச இசையில் மிக முக்கிய மானது "brass band" என்று சொல்லப்படும் பித்தளை வாத்தியங்களின் ஆதாவது அந்த காலத்து பேண்ட் இசை அதிகமாக இருக்கும்.
டிரம்ஸ் ,ட்ரம்பெட் ,சிம்பல்ஸ் தான் பிரதான இசை கருவிகள் ,இசை சிம்பொனி வடிவம்,சிவப்பு புரட்சிக்காரர்களின் கொதி நிலை குருதியில் கதிரருவாளை முக்கி எழுதிய வரிகள்..இதுதான் சோவியத் கம்யூனிச இசை.
இதன் தமிழ் வடிவம்தான் " மனிதா மனிதா " பாடல். இதில் இளையராஜாவின் வித்தை எங்கே என்றால் இந்த பாடலில் அவர் சேர்த்த வயலின் இசை தான். வேர லெவல்.
இந்த பாடலின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் இதை பாடிய ஜேசுதாஸின் மென் குரல் கூட இந்த பாடலில் உணர்ச்சி பொங்க கொப்பளிக்கும்.
இந்த பாடலை எல்லாம் கேட்டபின் ஒரு நிமிடம் கூட சும்மா உட்கார முடியாது. தவறு செய்யும் ஒவ்வொருவரையும் போட்டு துவைத்து எடுக்க மனம் ஆர்ப்பாட்டம் செய்யும்..நரம்புகள் புடைக்கும்,சுயமரியாதை பிறக்கும்.அதனால்தான் என்னவோ இந்த பாடலை இப்பொழுதுதேல்லாம் தொலைகாட்சிகளிலோ இல்லை கச்சேரிகளிலோ கேட்க முடியாது... உன்மையை சொல்லவேண்டுமென்றால் கட்சிகளுக்கு சொம்பு தூக்கி மக்களின் நலனை பின்னுக்கு தள்ளிய நமக்கென் இந்த பாடல் எல்லாம் ?
முடிந்தால் இந்த பாடலை கேளுங்கள்..ஒரு நிமிடம் நாம் மக்களுக்காக பேசுகிறோமா இல்லை அரசியல் கட்சிகளுக்காக பேசுகிறோமா என்பதை சுய பரிசோதனை செய்து
கொள்வோம்.
"சில ஆறுகள் மாறுதடா வரலாறுகள் மீறுதடா
பசியால் பல ஏழைகள் சாவதென்பது தேசியமானதடா
இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியாமானதடா
அடி சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா"