Monday, October 26, 2015

Andha Naal சுயமாக சிந்திக்க தெரிந்தவனுக்கு இந்தியாவில் என்னவேலை... அன்று மட்டுமா....இன்றும் இதுதான் நிலைமை...

ஏ வி எம்மின் அந்தநாள் 1954 இல் வெளியாது. இதன் கதையை எழுதி இயக்கியது  வீணை எஸ்.பாலச்சந்தர். வசனம் ஜவஹர் சீதாராமன்,ஒளிப்பதிவும் மாருதிராவ், தயாரிப்பு ஏவி மெய்யப்ப செட்டியார்.இதில் பாட்டுக்கள் இல்லை.பின்னணி இசையை ஏவிஎம்மின் சரஸ்வதி இசைகுழுவே மேற்கொண்டது. 
அந்த காலத்தில் மட்டும் அல்ல இன்றும் கூட மிகவும் சிந்திக்க வேண்டிய கருத்துக்களை இந்த படம் முன்வைத்தது.  இது படமாக்கிய விதமோ உண்மையில் ஒரு சர்வதேச தரத்தில் இருந்தது.  அந்த காலத்தில் அவ்வளவு தூரம்  முன்னேறியிருந்த  தமிழ் சினிமா  உலகம் பின்பு  ஏனோ  பின்தங்கி விட்டது.
மகாத்மா காந்தியின் சுதேசி போராட்டத்தில் மறைக்கபட்டிருந்த பல வரலாற்று உண்மைகளை இந்த படம் தொட்டிருக்கிறது.
ஒரு திரைப்படம் மக்களுக்கு சரியான பாதையை சரியான வரலாற்றை
காட்டவேண்டும் என்ற சமுக நோக்கில் இந்த படம் அன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய புரட்சி படம் என்றுதான் சொல்லவேண்டும்.
அன்றைய சமுகத்தில் நிலவி வந்த போலி தேசாபிமானம் அல்லது குருட்டு தேச பக்தி எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டியது.
தேசபக்தி கூச்சல் போடப்பட்ட அன்றைய காலகட்டத்தில் அது உண்மையில் வெறும் வேஷம்தான் என்பதை இந்த திரைப்படம் ஒன்றுதான் அன்று வெளிச்சம் போட்டு காட்டியது .அந்த வகையில் இது ஒரு வரலாற்று ஆவணமாகும்,
11 October 1943 அன்று இரவு ஜப்பான் சென்னை மீது குண்டு வீசியது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பின்னப்பட்டதுதான் கதை,
அன்று திருவல்லிகேணியில் மிகவும் துடிப்புள்ள ஒரு ரேடியோ என்ஜினியர்.இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கும் மலிவான விலையில் ரேடியோ செய்ய முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்.ஆனால் அவருக்கு பக்கபலமாக அன்று யாருமே இல்லை.இதனால் வெறுப்படைந்த அந்த இளைஞர் எடுத்த அடுத்த அடி..மிகவும் புரட்சிகரமானது அல்லது சர்ச்சைக்கு இடமானது. அவர்   துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார் ! அவர்தான் கதையின் நாயகன்.அவர் எப்படி கொல்லப்பட்டார் ஏன் கொல்லப்பட்டார். என்பதை சுற்றி பல Flashback காட்சிகளால் கதை நகர்கிறது இல்லை இல்லை ஓடுகிறது.

Friday, October 16, 2015

City of Joy அவலம் நிறைந்த ஒரு சேரியில்...அழகான மனிதம்...வெடித்த ஒரு புரட்சி! Patrick Swayze, Om Puri and Shabana Azmi.

City of Joy ஒரு இளம் அமெரிக்க டாக்டருக்கு  ஆபரேஷன் தியேட்டரில் கிடைத்த ஒரு அதிர்ச்சி! ஒரு   சிறுவனுக்கு ஆபரேஷன் செய்தார் ஆனால் அவன் கண்முன்னேயே இறந்துவிட்டான். சோகம் தாங்க முடியாத அந்த டாக்டர் (Patrick Swayze) ஒரு ஆத்மீக தேடலை நோக்கி இந்தியா வருகிறார், அதுவும் கல்கத்தாவுக்கு.
அங்கே அவர் கண்டது சந்தித்தது.....ஆத்மீகம் தேடியவருக்கு கிடைத்தது ஏமாற்றம் ..துன்பம்... துரோகம்.. வறுமை.
அவரை சிந்திக்கவே விடாமல் விதி  கல்கத்தாவின் சேரியில் கொண்டு போய் சேர்த்துவிட்டது.
கையில் உள்ள காசையும்  பாஸ்போர்ட்டையும் பறித்துக்கொண்டு அடித்து நொறுக்கியது குண்டர் கூட்டம்.
பிகாரில் கந்துவட்டி காரரிடம் தனது நிலத்தை பறிகொடுத்துவிட்டு பஞ்சம் பிழைக்க வந்த ஹன்சாரியும் அவனது மனைவியும்  மட்டுமே கூக்குரல் கேட்டு ஓடி வந்தனர்.
நினைவு மயங்கி இருந்த டாக்டர் மக்சை தங்களது குடிசைக்கு தூக்கி சென்று ஒரு வெள்ளைக்கார நர்சிடம் Joan Bethel சேர்த்தனர்.

மனித வாழ்வின் அவலத்தை கண்டு அதை விட்டு விலகி விடஎண்ணியவருக்கு அது முடியவில்லை.அவரின் சேவை அங்கு மிகவும் தேவையாக இருந்தது. அதையும் விட அந்த மக்களின் வாழ்வோடு அவரை அறியாமலேயே அவர் கொஞ்சம் நெருங்கிவிட்டார்.
அந்த மக்கள் கொடூரமான முதலாளிகளினதும் மக்களை பற்றி கொஞ்சம் கூட கவனிக்காத அரசாங்கங்களின் பாராமுகத்தாலும் ஒரு பிராணிகள் போன்று அந்த சேரியில் வாழ்ந்தார்கள்.

Thursday, October 15, 2015

Being There வார்த்தைகளை தாண்டிய ஒரு உலகம்! காட்சிகளை மீறிய ஒரு உண்மை!Peter Sellers Shirley MacLaine

Being There  இது 1979 வெளிவந்த ஆங்கில படம். இந்த திரைப்படம் மிகவும் சவாலான ஒரு கதையை மிகவும் நுட்பமாக கையாண்டு வெற்றி பெற்றது. புகழின் உச்சியில் இருந்த பீற்றர் செல்லர்ஸ், ஷேர்லி மக்களீன் மைக்கல் டக்லஸ் போன்றவர்கள் நடித்தது. ஒரு பெரிய பணக்காரர் இறந்து விடுகிறார்.அவரின் வீட்டு தோட்டத்தை கவனித்து வந்த ஒரு விதமான மனிதரின் கதைதான் இது. அந்த தோட்டக்காரர் கார்டனர் என்றே தன்னை குறிப்பிடுகிறார்.வீட்டுக்காரர் இறந்ததும் வேறு ஊரில் இருந்த அவரின் வாரிசுகள் வந்து வீட்டை பொறுப்பெடுக்கும் பொழுது இந்த கார்டனருக்கு செலுத்த வேண்டிய பணம் பற்றிய பேச்சு வரும்போது தனக்கும் இந்த வீட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிவிட்டு.தனது ஆடைகளை மட்டும் எடுத்துகொண்டு அடுத்த நேர வாழ்வைப்பற்றி எதுவித சிந்தனையும் இன்றி வெளியேறுகிறார். அந்த பணக்காரரின் ஆடைகளை அணியும் உரிமையை அவர் இவருக்கு கொடுத்திருந்தார். அந்த வீட்டை விட்டு மிகவும் விலை உயர்ந்த கோட்சூட் அணிந்து இவர் போவதை பார்த்தால் இவர் ஒரு வெறும் மனிதர் என்று யாருக்கும் தோன்றாது.
இந்த கார்டனர் எதுவித சிந்தனைகளும் அற்ற ஒரு ஞானி போல தோன்றும் ஒரு சாதாரண மனிதராவர்.இதுவரை வெளியுலகம் எதுவும் தெரியாமல் தன்னை பற்றியும் எதுவும் தெரியாமல் ஒரு அப்பாவி அல்லது ஒரு சித்த புருஷன் போல் வாழ்ந்தவர்.இனி அந்த வீட்டில் தனது இருப்பு முடிந்து போய்விட்டது என்பதை ஏற்று கொண்டு வீட்டுக்கு வெளியே வந்த அவருக்கு வெளி உலகம் புதிது புதிதாக அனுபவங்களை அல்லது படிப்பினைகளை காட்ட தொடங்கியது.
என்னதான் உலகம் அவரை நோக்கி வந்தாலும் அவரோ தனது தனது இருப்பில் தானாக தான் மட்டுமாகவே இருந்தார். உண்மையில் பிரபஞ்சம் இழுத்த இழுப்புக்கு இழுபட்டு கொண்டிருந்தார்.
ஒரு பணகாரியின் கார் வந்து அவரை மோதியது.
பின்பு அந்த பணக்காரியின் காதலையும் பெற்றார் ஆனால் அது அவருக்கு தெரியவே இல்லை.
அவளின் மரணப்படுக்கையில் இருக்கும் கணவனோ கார்டனரை தனது ஒப்புயர்வற்ற வழிகாட்டியாகவே கொண்டாட தொடங்கி விட்டார்.

Sunday, October 11, 2015

Chemmeen கருத்தம்மாவை தேடி கடலும் பரீக்குட்டியும் ஓயாமல் ஒலித்த........

Chemmeen மொழி கடந்து இனம் கடந்து நாடுகடந்து மனித மனங்களை உலுப்பி எடுத்த ஒரு மலையாள திரைக்காவியம்தான் செம்மீன் .
 மண்வாசம் கடல் வாசம் மீன்வாசம் எல்லாம் கலந்து காதல் வாசத்தையும்  சுமந்தது செம்மீன்.
அடிப்படையில் இது ஒரு புரட்சிப் படம்தான்.
மதத்தையும் பொருளாதார ஏற்ற தாழ்வுகளையும் மீறி வந்த காதல்.
அதுவும் வறுமை தாண்டவமாடிய  அந்த கடலோர கிராமத்து பின்புலத்தில்!
நிரந்தரமில்லாத மீனவ குடும்பங்களின்  வறுமை ஒருபுறம்.
அந்த வறுமையின் கோரப்பிடியில் இருந்து மீண்டுவர துடிக்கும் குடும்பத்தலைவன். அவன் தெரிவு செய்த மார்க்கமோ கொஞ்சம் சூதுவாது நிறைந்தது. அவன் சூட்சுமமாக மகள் கருத்தம்மாவின் காதலை மூலதனமாக பயன்படுத்துகிறான்,
இதுதான் துரோகத்தின் எல்லை. பாவம் பரீக்குட்டி!
சூழ்நிலை கைதி ஆகிவிட்ட கருத்தம்மா பழனிக்கு வாழ்க்கைப்படும் சோகம்,
அந்த சோகத்தை எண்ணி கண்ணீர் விட கூட உரிமையில்லாத வாழ்க்கை.
அவள் எப்படித்தான் வாழ முயற்சித்தாலும் கருதம்மாவையும் பழனியையும் நிம்மதியாக வாழவிடகூடாது என்று கங்கணம் கட்டி கொண்டிருக்கும் கிராமத்தவர்களின் தரம் குறைந்த பேச்சுகள்  பழனியின்  மனதில் சந்தேக நெருப்பை சதா மூடிக்கொண்டு இருக்கிறது,
இந்த நெருப்பை சமாளிக்க முடியாமல் தடுமாறும் கருத்தம்மா மறுபுறம் மறக்க முடியாத அந்த பரீக்குட்டியின்  நினைவுகளால் ஒவ்வொரு நிமிஷமும் வெந்து சாகிறாள்.

Saturday, October 10, 2015

mr and mrs iyer விபத்து போல வந்த உறவு பிரிந்தே போகவேண்டிய நியதி.......ஆனாலும்....

mr and mrs iyer  மிஸ்டர் அண்ட் மிசிஸ் அய்யர் என்ற படம் மனித உணர்வுகளை அதிகமாகவே கிளறி பார்த்துவிட்ட ஒரு திரைப்படமாகும்.
கையில் குழந்தையுடன் ரயிலில் ஒரு பெண்.
அறிமுகமே இல்லாத ஒரு ஆண்.
ரயில் போகும் பாதையில்  ஒரு யுத்தம்.
அதன் உஷ்ணம் இருவரையும் எங்கோ தள்ளி விடுகிறது,
தவிர்க்கவே முடியாத விதியின் சூறாவளியில் இருவரும்.
வருஷக்கணக்கில் நடக்கவேண்டிய விடயங்கள் ஓரிரு நாட்களிலேயே நடந்து விடுகிறது, எந்த இடத்தில் எவர் எவரில் தங்கி நிற்கவேண்டிய சூழ்நிலை உருவாகியது
என்று கண்டு பிடிக்க முடித்த வேகத்தில் விதி முடிச்சு போட்டு விடுகிறது.
ஒரு பக்கம் பயங்கரத்தின் எல்லையே கண்டுவிட்ட திகில்.
வாழ்வின் இறுதி என்பதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பார்ப்பவர் எவரும் நிச்சயம் கதி கலங்கிதான் போவார்கள். இதற்கு மீனாட்சியும் ஸௌத்திரியும்(முஸ்லிம்) விதிவிலக்கா என்ன?
பாரம்பரிய கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்தஆசார மீனாட்சியின் தலை எழுத்து சுதந்திர முற்போக்கு சிந்தனையுள்ள ஸௌத்திரியுடன்  வேறு வழியே இல்லாமல் சங்காத்தம் வைக்கவேண்டிய சூழ்நிலை.
பயந்து பயந்து அவனை தனது கணவன் என்று பொய்சொல்லி காப்பற்றவேண்டிய கட்டாயம்.
கண்முன்னே கொடூரத்தை பார்த்து நடுங்கிப்போன மீனாட்சிக்கு ஸௌத்திரியின் நெருக்கம் கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு.
இவற்றை எல்லாம் ஏதோ இருவரின் சொந்த வாழ்க்கையை பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

What the bleep do we know? பிரபஞ்சம்/கடவுள்/ஆத்மா! அதை பற்றி எங்களுக்கு என்னதான் தெரியும்?

இந்தப்படம் மிகவும் சவாலான கற்பனையும் கலையும் சேர்ந்த விவரண படமாகும்.
ஏராளமான விமர்சனங்களையும் அதற்கு நிகரான பாராட்டுக்களையும் பெற்று  வசூலிலும் வெற்றி பெற்ற ஒரு அதிசய படமாகும்.
விஞ்ஞானிகளின் கடுமையான விமர்சனம் அதே சமயம் பாராட்டுகள் என்று இரண்டு விதமான கருத்துக்களும் இருந்தாலும் பார்வையாளர்களின்
கோணத்தில் இது ஒரு பெரும் சேவையை செய்த படம் என்று இதை கூறலாம்.
Quantum Science or Quantum Mechanics என்று படித்தவர்களாலேயே  விளங்க முடியாத ஒரு விடயத்தை சாதாரண சினிமா ரசிகர்களுக்கும் விளங்க வைக்கும் முயற்சியை இது செய்தது,
பிரபஞ்சம் அல்லது கடவுள் போன்ற பதில் காண முடியாத கேள்விகள் ஒரு பெண்ணின் மனதில் அலைமோதியது.
அவரோ காது கேளாதவர் அவரின் மௌன உலகத்தில் நாம் சாதரணமாக காணும் காட்சிகள் அவருக்கு கொஞ்சம் வித்தியசாமாக தோன்றியதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.
நாம் காணும் காட்சிகள் உண்மையில் அங்கு நிதர்சனமாக உள்ள காட்சிகள்தானா?
காணும் காட்சிகள் நாம் காண்பதாலேயே அவை காட்சிகள் ஆகின்றனவா? உண்மையில் அங்கு ஒன்றுமே இல்லையா?
இது போன்ற கேள்விகள் உங்கள் தலையை சுற்ற செய்யும்.
அழகான இந்த பிரபஞ்சம் அழகாக இருப்பதற்கும் அல்லது அழகில்லாமல் இருபதற்கும் அதை பார்க்கும் நாம் தான் காரணமா?
 இவையெல்லாம் வெறும் அறிவியல் கேள்விகளும் அதற்கு பதில் தேடும் முயற்சிகளும் ஆகும்,
ஆனால் இந்த அறிவியல் சமாசாரங்களை அழகான ஒரு திரைப்படமாக படம் பிடித்து காட்டுவது சாதாரண விடயம் அல்ல.
உங்கள் எண்ணங்கள் தான் பௌதீக ரகசியம் என்ற கருத்தை கற்பனை கதா பாத்திரங்கள் காட்சிகள்  மூலம் ஒரு கவிதையாக காட்டிஉள்ளார்கள்.
செவிப்புலன் அற்ற  ஒரு பெண்  படப்பிடிப்பாளர் கதையை எடுத்து செல்கிறார்.
அவர் காணும் இந்த பிரபஞ்சதின்  அழகு  ஏன்  நமக்கு தெரிவது இல்லை?
அவரின் பார்வையில் உள்ள  விஷேச தன்மைதான் என்ன?
இன்னும் என்னனவோ விடயங்களை விளங்க வைக்கும் பெரிய முயற்சியை இத்திரைப்படம் முன்னெடுத்திருக்கிறது..
நாம் யார்? எங்கே போகிறோம்? என்பது பற்றியெல்லாம் எமது விடை காண முடியாத கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக புதிய புதிய கேள்விகளை கேட்டு எமது அறிவுக்கு அசல் தீனியை இத்திரைப்படம் தந்திருக்கிறது.
நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

Friday, October 9, 2015

Dasvidaniya ஓடிகொண்டே இருந்தவன் ஒருநாள்

Dasvidaniya  ஓடிக்கொண்டே இருந்தவன் திடீரென்று  ஓட்டத்தை
நிறுத்தவேண்டிய நிலைக்கு ஆளானான். அப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது அடடே  இவ்வளவு  காலமாக அவன்  ஓடிகொண்டே  இருந்திருக்கிறான், வேறு என்னதான் செய்தான்? எல்லாமே செய்தான் ஆனால் அவனுக்காக அவன் எதுவுமே செய்யவில்லை.
இந்த வாழ்வு முடியப்போகிறதே என்று அவன் கவலைப்படுவது ஒரு பெரிய
ஜோக்.

ஏனென்றால் அவன் இதுவரை வாழவே இல்லை, வெறுமனே ஓடிகொண்டல்லவா இருந்திருக்கிறான்?
வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒருவன் தன்வாழ்வு முடியப்போகிறதே என்று கவலை கொண்டால் அதில் நியாயம் இருக்கும்.ஆனால் இவன்தான் வாழவே இல்லையே இல்லாத வாழ்க்கை இனி இருந்தென்ன போயென்ன?

இந்த  பிரமாண்டமான கேள்வி அவனை நோக்கி புயலாக அடித்தது,
இனி என்ன செய்யலாம் ?
வாழ்ந்து பார்க்கலாமே?
வாழ்ந்தானா?
அவனுக்கும் எத்தனையோ கனவுகள் இருந்தன. அன்றாட பிரச்சனைகளில் அவன் ஓடிகொண்டே இருந்தான், நாற்பதை கடந்தும்  தனிக்கட்டையாகவே இருந்தான்.
வயோதிப அம்மா ...வாட்டி பிழிந்து எடுக்கும் முதலாளி....வீட்டுக்கும் நாட்டுக்கும் வேலை இடத்து நண்பர்களுக்கும் எல்லோருக்குமே நல்லவன்.
அவன் இந்த வாழ்வை விரும்பி இருந்தானா இல்லையா என்ற கேள்வியும் யாரும் கேட்கவில்லை அவனும் தன்னை தானும் கேட்கவில்லை.
ஓட்டத்திற்கு ஒருநாள் காலக்கெடு விதிக்கப்பட்டது!
ஆடிப்போனவன் முகத்துக்கு நேரே ஒரு கேள்வி கணை வந்து பாய்ந்தது.
வாழ்க்கையை பற்றிய கவலை வாழ்பவர்களுக்கு அல்லவா வரவேண்டும்?
நீதானே வாழவே இல்லையே? ஓடிகொண்டல்லவா இருக்கிறாய்?
உனக்கேன் அந்த கவலை?
ஓட்டம் நிற்கவேண்டிய நேரத்தில் வாழ்ந்து பார்க்க முடியுமா?
முயற்சிதான்!

Fire ! மௌனமாக அடிவாங்கியவர்கள் முதல்முறையாக பேசினார்கள்!

Fire  திரைப்படம் 1996 இல் வெளியானது. கனடா வாழ் இந்திய பெண்மணியான தீபா மெஹ்தா என்பவரால் இயக்கி தயாரிக்கப்பட்டது.
இத்திரைப்படம் இந்தியாவில் பெரும் எதிர்ப்புக்களை எதிர்கொண்டது, திரை அரங்குகள் தீவைத்து கொழுத்தப்பட்டன, படுமோசமான ஒரு சமூகவிரோத திரைப்படம் போன்று எல்லா சமயத்தினரும் இந்த திரைப்படத்தை குத்தி கிளறினார். அவர்களின் கோபத்தை
இவ்வளவு மோசமாக தூண்டிவிடும் அளவு என்னதான் இத்திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டது?
யாராலும் அதிகம் பேசப்படாமல் மறைத்து மறைத்து வைக்கப்பட்ட ஒரு பெரிய உண்மையை இந்த திரைப்படம் போட்டு உடைத்துவிட்டது.
இந்த fire முதலில் கொழுத்த தொடங்கியது சமய அடிப்படைவாதிகளைத்தான், இந்த சமய அடிப்படைவாதிகள் கலாசாரத்தை தங்கள் துணைக்கு அழைத்து கொண்டார்கள்.
இந்திய கலாச்சாரமும் இறைபக்தியும் தங்கள் தலைமேல்தான் இருப்பதாக எண்ணி கொண்டிருந்த இந்த காவலர்கள் இந்த படத்தை பார்த்து பயந்தார்கள் என்பதே உண்மை,
அப்படி பயப்படுவதற்கு காரணமும் இருந்தது,
எந்த எந்த பொய்களையெல்லாம் பெண்கள் மேல் ஏற்றி வைத்து சவாரி செய்தார்களோ அந்த பொய்கள் எல்லாம் வெறும் மண்கோட்டைகள் போன்று தூள் தூள் ஆக்கிவிடும் வலிமை இந்த Fire படத்துக்கு இருந்ததை அவர்கள் சரியாகவே இனம் கண்டு கொண்டார்கள்.
எங்கே பெண்கள் தங்களை தூக்கி எறிந்து விடுவார்களோ என்று பயப்படும் ஒவ்வொரு ஆணும் இந்த படத்தை பார்த்து பயந்தான் என்பது ஒன்றும் மிகை படுத்தப்பட்ட வாசகம் அல்ல.
பெண்களை அன்பினால் அல்லாது, அவர்களை உண்மையில் ஒரு அடிமையாகவே வைத்திருக்கும் கலாசாரத்தில் ஊறி போயிருக்கும் சராசரி மனிதானால் Fire படம் ஏற்படுத்திய உஷ்ணம் தாங்க முடியாமல் போய்விட்டது.
இந்த படம் காமத்தை கொஞ்சம் யதார்த்த விடயமாகவே காட்டியது. இது அவர்களின் முதல் பிரச்சனை அல்லது முதல் பயம்,
காமம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது. பெண்களுக்கு அது இருந்தால் அவள் நடத்தை கெட்டவள் போன்று கருதப்படவேண்டும்.
பெண் தனது காமத்தை எண்ணி  பயந்து வெட்கப்பட்டு மிகவும் ஒரு கீழ்த்தரமான குணமாக எண்ணி குற்ற உணர்வுடனேயே இருக்க வேண்டும்.