Sunday, October 11, 2015

Chemmeen கருத்தம்மாவை தேடி கடலும் பரீக்குட்டியும் ஓயாமல் ஒலித்த........

Chemmeen மொழி கடந்து இனம் கடந்து நாடுகடந்து மனித மனங்களை உலுப்பி எடுத்த ஒரு மலையாள திரைக்காவியம்தான் செம்மீன் .
 மண்வாசம் கடல் வாசம் மீன்வாசம் எல்லாம் கலந்து காதல் வாசத்தையும்  சுமந்தது செம்மீன்.
அடிப்படையில் இது ஒரு புரட்சிப் படம்தான்.
மதத்தையும் பொருளாதார ஏற்ற தாழ்வுகளையும் மீறி வந்த காதல்.
அதுவும் வறுமை தாண்டவமாடிய  அந்த கடலோர கிராமத்து பின்புலத்தில்!
நிரந்தரமில்லாத மீனவ குடும்பங்களின்  வறுமை ஒருபுறம்.
அந்த வறுமையின் கோரப்பிடியில் இருந்து மீண்டுவர துடிக்கும் குடும்பத்தலைவன். அவன் தெரிவு செய்த மார்க்கமோ கொஞ்சம் சூதுவாது நிறைந்தது. அவன் சூட்சுமமாக மகள் கருத்தம்மாவின் காதலை மூலதனமாக பயன்படுத்துகிறான்,
இதுதான் துரோகத்தின் எல்லை. பாவம் பரீக்குட்டி!
சூழ்நிலை கைதி ஆகிவிட்ட கருத்தம்மா பழனிக்கு வாழ்க்கைப்படும் சோகம்,
அந்த சோகத்தை எண்ணி கண்ணீர் விட கூட உரிமையில்லாத வாழ்க்கை.
அவள் எப்படித்தான் வாழ முயற்சித்தாலும் கருதம்மாவையும் பழனியையும் நிம்மதியாக வாழவிடகூடாது என்று கங்கணம் கட்டி கொண்டிருக்கும் கிராமத்தவர்களின் தரம் குறைந்த பேச்சுகள்  பழனியின்  மனதில் சந்தேக நெருப்பை சதா மூடிக்கொண்டு இருக்கிறது,
இந்த நெருப்பை சமாளிக்க முடியாமல் தடுமாறும் கருத்தம்மா மறுபுறம் மறக்க முடியாத அந்த பரீக்குட்டியின்  நினைவுகளால் ஒவ்வொரு நிமிஷமும் வெந்து சாகிறாள்.

முழுப்பணத்தையும் கருத்தம்மாவின் தந்தையிடம் பறிகொடுத்து விட்டு பைத்தியகாரன் போல் கடற்கரையில் திரியும் பரீக்குட்டி....
சாட்சி இல்லாத வழக்கில் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டான் பரீக்குட்டி!
வெறும் ஆளாய் போனாலும் மனதில் கருத்தம்மா கருத்தம்மா என்ற குரல் மட்டும் தாயை தொலைத்துவிட்ட குழந்தை போல அழுதுகொண்டேஇருந்தது.

இந்த படத்தில்  கதையை  நகர்த்திகொண்டிருக்கும் முக்கிய பாத்திரம்  கடலாகும், அது ஓயாமல்  வீசும் அலைகள்  ஒவ்வொரு நேரமும்  பார்பவரோடு பேசிகொண்டிருக்கும் வித்தையை இந்த படத்தில் காணலாம்,
இதன் இசை வங்காளத்தை சேர்ந்த சலீல்சௌத்திரியாகும்.
இயற்கையோடு ஒன்றிய வர்ணங்களும்  அதற்கு உயிர் கொடுக்கும் இசையும் சேர்ந்து செம்மீனை ஒரு காவியமாக்கி விட்டது,
கணவன் பழனியோடு வாழ்ந்து  ஒரு குழந்தைக்கும் தாயாகிய பின்பு கூட மறக்க முடியாத பரீகுட்டியின் நினைவுகளால் தினம் தினம் அனுபவிக்கும் துன்பம் ஒரு புறம் பழனியின் சந்தேக வார்த்தைகள் மறுபுறமுமாக கருத்தம்மாவின் மனதை வெகு தூரத்துக்கு தள்ளிவிடுகிறது,ஒரு நாள் இரவில்  அவளது குடிசைக்கு அருகில்  பரீகுட்டி சோகத்துடன் ....
கருத்தம்மாவுக்கு இனியும் தன்னை தானே மறைக்க முடியாத ஒரு நிலைமைக்கு வந்து விடுகிறாள். அல்ல அல்ல பழனியும் ஊராரும் அந்த நிலைக்கு அவளை தள்ளி விடுகிறார்கள்...
முடிவு........கடல்கரையில்.....
அடுத்தநாள்......அவளின் தங்கை கருத்தம்மாவை தேடிக்கொண்டு அந்த கடல்கரையில் கூவிக்கொண்டே.......சேச்சி........சேச்சி.........சேச்சி......