Thursday, November 5, 2015

Chocolat - Chocolaterie MAYA.. மனித வாழ்வு ஓரு சொக்கலேட்டு போல...ரசிக்கவேண்டும்...


“Life is what you celebrate. All of it. Even its end.”
 A woman and her daughter open a chocolate shop in a small French village that shakes up the rigid morality of the community.
சொக்கலேட் மிகவும் அழகான ஆனால் புரட்சிகரமான திரைப்படம் . இரண்டாவது உலக
யுத்தம் முடிந்து சுமார் பதினைந்து வருடங்களுக்கு பின்பு இன்னும் பழமையை கைவிடாத ஒரு பிரெஞ்சு கிராமத்தை சுற்றி கதை செல்கிறது. அந்த கிராமத்தில் மிகவும் பழம் வாய்ந்த ஒரு நபராக தேவாலயத்தின் பாதிரியார்..அவரை பின்னணியில் இருந்து இயக்கம் உள்ளூர் மேயர்..பாதிரியார் மூலமாக அந்த கிராமத்தில் ஏறக்குறைய ஒரு சர்வாதிகாரி மாதிரி இருக்கிறார்.இவர்களின் வழிகாட்டல்களை அல்லது போதனைகளை தவிர சுயமாக எதையுமே சிந்திக்காத எதுவுமே தெரியாத கிராமத்து மக்கள்.

இந்த கிராமதிற்கு ஒரு நாள் ஒரு பெண் தனது சிறிய மகனோடு வருகிறார்.அவர் அங்கு ஒரு கடையை வாடகைக்கு எடுத்து தனது சொக்கலட் கடையை ஆரம்பிக்கிறார். அதுவரை அந்த மக்களுக்கு சொக்கலட் என்றால் என்னவென்றே தெரியாது. எதுவித பொழுதுபோக்குகளும் சுவாரசியமும் அற்ற அந்த கிராமத்துக்கு அந்த சொக்கலேட் கடையும் அதை நடத்தும் அந்த பெண்ணும் மிகபெரும் கவர்ச்சி பொருள் ஆகின்றனர், அந்த கிராமக்களின் கவனம் சொக்கலேட்டை நோக்கி போவதை விரும்பாத பழமைவாத பாதிரியும் மேயரும் அதை ஒரு சாத்தானின் வரவாக சித்தரிக்கின்றனர். சதா ஒரு சீரியசான முகத்தோடு உலகத்தையே தனது தலையில் சுமப்பது போன்று எதற்கும் ஒரு கட்டுப்பாடு ஒழுக்கம் சட்டம் என்று மக்களை ஒரு இறுக்கத்தில் வைத்திருக்கும் மேயருக்கு நாள் போக போக மக்கள் தற்போதெல்லாம் தேவாலய நிகழ்சிகளை விட சொக்கலேட்டை அதிகம் விரும்புகிறார்கள் என்ற எண்ணம் வரத்தொடங்கி விட்டது. மெதுவாக சொக்கலேட் கடை க்கும் அதை நடத்தும் பெண்ணை பற்றியும் மக்களுக்கு வெறுப்பு வருமாறு செய்வதற்கு பலவிதமான பிரசார உத்திகளை கையாளுகிறார்.

மக்கள் யுத்தத்தின் வடுக்களில் இருந்து இன்னும் விடுபடாமல் இருக்கும் பொழுது இந்த மாதிரி சொக்கலேட் கடை எல்லாம் ஒரு அவமானம் ...அவளும் தந்தை பெயர் தெரியாத அவளது மகனும் ஒரு வெட்கம் தரும் விடயம் என்றெல்லாம் கயிறு திரித்து பார்க்கிறார்.
ஆனால் மெல்ல மெல்ல சொக்கலேட் பெண்மணி கிராமத்து மக்களின் செல்வாக்கை பெறுகிறார்.

மனிதர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தனது சொல்லுக்கு கட்டுப்படமாட்டார்கள் என்ற எண்ணம் மேயருக்கு வலுக்க அவர் பாதிரியாரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து தனது கருத்துகளை எல்லாம் பாதிரியாரின் போதனைகளாக மக்களுக்கு பிரசாரம் செய்கிறார்.
ஒரு சாதாரண சொக்கலேட் ஒரு சாதாரண விடயமே அல்ல அதிலும் அதை அந்த கிராமத்திற்கு கொண்டுவந்த பெண்ணும் சாதரனமானவள் அல்ல. சமயத்தாலும் பாரம்பரியத்தாலும் கட்டுப்பட்டு இறுகி கிடந்த கிராமத்து மக்கள் எப்பவோ நடந்த யுத்தத்தின் வடுக்களை நினைவு கூர்ந்து ஒருவித கவலை தோய்ந்த முகத்தோடு வாழ்வதே நேர்மை அல்லது மரபு என்ற ரீதியில் வாழ்ந்தார்கள். மேயரால்  மிகவும் நுட்பமாக  திட்டமிட்டு அவர்களின் கவனம் சதா தேவாலயத்தையும் அவர்களின் வழிகாட்டியான தன்னையுமே சார்ந்து இருக்குமாறு பார்த்துகொண்டார்.
எல்லாம் சரியாக போய்கொண்டிருக்கும் போதுதான் வந்துசேர்ந்தார் சொக்கலேட் பெண்மணி.
அவளின் முற்போக்கான எண்ணங்களும் மனிதர்களின் மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் தன்மையும் எல்லாவற்றையும் விட அவள் மனிதர்களின் வாழ்வை மிகவும் நேசித்தாள் .
அந்த கிராமத்து  மனிதர்களின் பாலுணர்வு போன்ற சாதாரண  உணர்ச்சிகளுக்கு  எதுவித  அந்தஸ்த்தும் அங்கு கிடையாது,
அவளின் வருகை அவர்களின்  வாழ்வியல் ரசனைக்கு மிகபெரும் ஊக்கத்தை கொடுத்தது,
இவளுக்கு பலம் சேர்ப்பது போல ஒரு நாடோடிகூட்டம் வந்து சேர்ந்தது, அவர்கள் ஜிப்சி இனத்தவர்கள் .
ஜிப்சி இனத்தவர்கள் இயற்கையோடு ஒன்றியவர்கள். உணவு மது பாட்டு ஆட்டம் பாலுணர்வு போன்ற விடயங்களில் மிகவும் யதார்த்தமாக இருந்தார்கள். வாழ்வை ரசித்தார்கள்.
அந்த ஜிப்சிகூட்டத்தில் இருந்த ஒரு வாலிபனோடு சொக்கலேட் பெண்ணுக்கு காதல் அரும்பியது,
பின்பு கதை எப்படி எப்படி எல்லாம் திரும்பியது அவர்களுக்கு எதிராக பழமைவாதிகள் எப்படி எதிர்கொண்டார்கள்?
கிராம மக்கள் மனதில் வாழ்வை பற்றிய கோட்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதா? அல்லது மீண்டும் பழைய வாழ்க்கைக்கே திரும்பிவிட்டார்களா?
இப்படி எவ்வளவோ கேள்விகள் கேட்கலாம்..
இந்த படம் கூறும் முக்கியமான கருத்து என்னவென்றால் இது மனிதவாழ்வின் ரசனையை முன்னிறுத்தியது.
வாழ்வு வாழ்வதற்கே அல்லது வெறும் வரட்டு கோட்பாடுகளை காவிக்கொண்டு இருப்பதற்குத்தான் வாழ்க்கை என்ற கோட்பாட்டை இந்த திரைப்படம் அழகாக சாடியது,
இந்த வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது?
ரசிப்பதற்கு எத்தனையோ விடயங்கள் நம்மை சுற்றி இருக்கின்றது .
நாமோ அவற்றை விட்டு விட்டு சமயத்தின் பின்னாலும் வேறு வரட்டு கோட்பாடுகளின் பின்னாலும் சென்று வாழ்வை வாழாமல் வீணாக்குகிறோம் என்பதுதான் இந்த திரைப்படத்தின் மையக்கருத்தாகும்
யுத்தத்தின் வடுக்களை கூறிக்கொண்டே தமது சுய நலத்துக்காக மக்களை கட்டிபோட்டிருக்கும் பிற்போக்கு வாதிகளை இந்த படம் நகைச்சுவையாக சாடியிருப்பது இங்கே முக்கியமாக நாம் கவனிக்க வேண்டும்.
இத்திரைப்படம்  பார்வையாளர்களை கொஞ்சமாவது வாழ்க்கையை நோக்கி முன் தள்ளியிருக்கும் என்பது   நிச்சயமான உண்மையாகும்.