Saturday, November 28, 2015

The English Patient கொதிக்கும் பாலைவன சுடுமணலில் உறங்காமல்.....அவள்....போராடி.....


The English Patient இரண்டாவது உலக யுத்தம் முடியும் நேரம்
இத்தாலிய நாட்டின் யுத்த களத்தில் திரைப்படத்தின் கதை நடக்கிறது.
 இத்தாலியிலும் துனிசியாவிலும் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் ஒரு அமெரிக்க பிரித்தானிய கூட்டு தயாரிப்பாகும்.
இதன் கதை இதே தலைப்பில் வெளிவந்த  மிக பிரபபமான ஒரு நாவலாகும். இதற்கு புலிட்சர் பரிசும் கிடைத்தது ,
இதன் ஆசிரியர் இலங்கையை சேர்ந்த மைக்கல் ஒண்டாச்சி என்பவராகும், இவர் இலங்கை பரங்கி இனத்தவராகும் மட்டக்களப்பில் உள்ள ஒண்டாச்சி மடம் என்ற கிராமம் தஞ்சாவூரிலும் உள்ளது, இவரின் மூதாதையர் தஞ்சாவூரை சேர்ந்தவர்களும் ஒல்லாந்து தேசத்தவர்களும் ஆவார்கள். இவர் கனடாவில் மிகவும் பிரபலமான ஒரு ஆசிரியர் எழுத்தாளர் பதிப்பாளர்
திரைப்பட ஆர்வலர் என்று இவரை பற்றி அடிக்கி கொண்டே போகலாம்,

இந்த திரைப்படம் இதன் மூலபிரதியில் இருந்து மிகவும் சவாலான கட்டங்களை தாண்டியே திரைக்கதை உருவத்தை எடுத்தது,
மிகவும் பாரதூரமான சம்பவங்களை இது உள்ளடக்கி இருக்கிறது,
ஒருபுறம் இரண்டாவது உலக யுத்தம் ஏற்படுத்தி விட்டு போன அவலம் சந்தேகம் ஆபத்து போட்டி பொறாமை வஞ்சம் ...அடுத்த செக்கன் என்ன நடக்கும் யார் எதிரி யார் நண்பன் என்று ஐரோப்பா முழுவதும் யுத்த கள நிலைமைகள் அப்படியே இன்னும் மாறாமல் இருந்தமை ஒருபுறம்,
காயப்பட்ட ராணுவத்தினர் பொதுமக்கள்  மற்றும் யுத்தகைதி பரிமாற்றம் மறுபுறம்.
யுத்தத்தில் யார் யார் என்னென்ன இலாபம் பெற்றார்கள் என்னன்ன தோல்விகள் காயங்கள் பெற்றார்கள் என்று யாருக்குமே தெளிவாக தெரியவில்லை, எல்லா மனிதர்களிடமும் ரகசியங்கள் ஏராளம் இருந்தன. எல்லோரும் எல்லோருக்கும் ஓரளவு பயந்தார்கள்.
எல்லா திசைகளிலும் அழிவுகள் சேதம் அவலங்களே காணப்பட்டான.;குண்டுகளால் சிதைவடைந்த ஒரு தேவாலயத்தில் உள்ள இத்தாலிய தாதி சேவை செய்துவருகிறார்,
அவர் பெயர் ஹன்னா. அவரிடம்  முக்கால் வாசி  நெருப்பால் எரிந்து போன ஒரு நோயாளியை இத்தாலிய ராணுவத்தினர் ஒப்படைத்தனர் .
அந்த பெயர் தெரியாத  நோயாளி ஒரு ஜெர்மன் உளவாளியாக இருக்க கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு.
அந்த நோயாளி ஆங்கிலம் பேசினார் எனவே அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர்  English Patient.


அவனின்  (அல்மசி) டயரியில் அவனது கதை இருந்தது,
அவன்  லிபியா பாலைவனத்தில்  பெற்றோலிய படுக்கைகளை  தேடி வந்த  ஒரு  கம்பனியின் நில அளவையாளன். அவன் அதற்குரிய வரைபடத்தை  பின்பு  ஜெர்மன் ராணுவத்தினருக்கு  தனது வண்டிக்கு அவசியம் தேவையான  எரிபொருளுக்காக பண்டமாற்றம் செய்ய வேண்டியதாயிற்று,  இந்த சம்பவம் அன்றைய யுத்த சூழ்நிலையை  விளக்க போதுமானது என்றெண்ணுகிறேன்,

அல்மசிக்கும் கதரினுக்கும் விதிவசத்தால் ஒரு ஆழமான காதல் முகிழ்த்தது, அந்த காதல்  ஏராளமான  ஆபத்துகளை கொண்டு வரும் என்பது  மிகவும் தெரிந்த  விடயம்தான்.
ஏனெனில் அல்மசி காதலிப்பது ஒரு  சாதாரண பெண்ணை அல்ல. கப்டன் கிளிப்டனின் மனைவிதான் கதரின்.
இது முறையான காதல் அல்லவே என்று  சிந்திக்கும் முன்பாகவே அந்த காதலை மிகவேகமான ஆழமான காதலாக இந்த திரைப்படம் காட்டி
விடுகிறது.
இது ஒரு அமரத்து காதலர்களின் கதையாக தோன்றுவதுதான் இதன் சிறப்பு.
ஒரு மனைவிக்கு வேறு ஒருவனுடன் காதல் வரலாமா என்று நம் சிந்தனை எழுவதற்கு இடம் கொடுக்காமலேயே கதை நகர்ந்து விடுகிறது,
அதற்கு முக்கிய காரணம் அதில் நடித்த    
Ralph Fiennes as Count László Almásy
Kristin Scott Thomas as Katharine Clifton இந்த இருவரும்தான்.
ஆரம்பத்தில்  ஒரு  காம  உணர்வால் உந்தப்பட்ட சராசரி  காதலர்களாக தெரிந்தாலும் கதையின்  ஓட்டத்தில்  அவர்களின்  காதல் மிக உயர்ந்த அந்தஸ்தை பெற்று விடுகிறது,
அதற்கு  படத்தை உருவாக்கியவர்களின்  திறமை மிகப்பெரிய காரணமாகும்.
எல்லாவற்றிலும் மேலாக இதன்  பின்னணி இசை படத்தின்  ஒவ்வொரு காட்சிக்கும்  உயிர்கொடுத்திருக்கிறது.
ஒரு  பாலைவன சூழலில்  உள்ள அமானுஷ்ய உணர்வு..வெறுமை அந்த வெறுமையின் வெப்பம்...இவையெல்லாம்  இசையில்   அப்படியே தணலாக உருகுகிறது.
பாலைவனத்தின் மணல் திட்டுக்கள் கூட அழகான ஓவியமாக கதை பேசும் காட்சிகள் இதில் ஏராளம்,
யுத்தத்தின் ஆபத்தும் பாலைவனத்தின் கொடுமையும் தாண்டி  எங்கோ ஒரு மூலையில்  துளிர்விட்டு வாழ்க்கையின்  அற்புத நிமிஷங்களை அதன் அழகை அதன் துயரை எல்லாம் அள்ளி வீசி இருக்கிறது படத்தின் பின்னணி இசை, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு உயிர்த்துடிப்பு இந்த படத்தில் இருக்கிறது,
அடிக்கடி வரும் ஒரு பாலைவன வாசிகளின் இனம் புரியாத வரிகளில் இசைக்கப்படும் பெண்ணின் பாடல் ஒன்று கேட்பவர் மனதை சுக்கு நூறாக உடைத்துவிடும்/,
கதரினின் கணவன் தனது சிறிய விமானத்தை மோதி இருவரையும் கொல்ல முயற்சிக்கிறார், அதில் அவர் இறந்து விடுகிறார்,
கதேரின் பலத்த காயத்திற்கு உள்ளாகிறார்,
கதேரினை ஒரு பாலைவன மண் குகையில் கிடத்தி விட்டு தொலைவில் உள்ள ராணுவ முகாமுக்கு நடந்து செல்கிறார் அல்மசி,
அல்மசியால் கதேரினை காப்பற்ற முடிந்ததா?
வாழ்க்கை அவர்களிடம் என்ன விலையை கேட்டது?
வேகவேகமாக காதலில் விழுந்து வாழ்க்கையில் விழுந்து பாலைவனத்தில் முடிந்து போனது,
 இறுதி காட்சிகளில்  அந்த பாலைவனத்தில் ஒலிக்கும் அந்த பாடல்... அவர்களின் காதலுக்கு சாட்சியாக நானிருக்கிறேன் என்று  அந்த பாலவனமே தாலாட்டு பாடுவது போல் இருக்கிறது,
எனது இந்த திரைப்படம் பற்றிய கருத்துக்கள் முழுமையானவை அல்ல. மனதில் தோன்றிய சில எண்ணங்களை கூறியுள்ளேன்,
இது ஒன்பது ஆஸ்கர் பரிசுகளை குவித்த படம் இதைப்பற்றி நான் சொன்னதெல்லாம் சொற்பமே, இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.