Thursday, October 12, 2023

Dor ( தோர் ) ஹிந்தி இந்து முஸ்லீம் பிரச்சனைகளை அழகியலோடு காட்சி படுத்தி இருக்கிறார்கள்

ராதா மனோகர் : dor ( தோர் ) ஹிந்தி திரைப்படம்!  வெளியான ஆண்டு 2006
இந்து முஸ்லீம் மதங்கள் சார்ந்த சில சிக்கலான பிரச்சனைகளை,
மனித மாண்பு குறையாமல் அழகியலோடு காட்சி படுத்தி இருக்கிறார்கள்
இமாச்சல பிரதேசத்தின் பச்சை புல்வெளிகள் மலைகள் அழகிய பள்ளத்தாக்குகள்.
எந்தவித ரசனையும் அற்றவர்களை கூட  மயங்க வைக்கும் இயற்கை அழகை பிரபஞ்சம்  அந்த மாநிலத்திற்கு  அளவுக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறது,
அங்கே உள்ள ஒரு சின்னஞ்சிறு தம்பதிகளின் வாழ்வில் அடித்தது மிகபெரும் புயல்.
சவுதி அரேபியாவுக்கு சென்ற அவளின் ( ஜீனத்) கணவன் செய்யாத ஒரு கொலைகுற்றச்சாட்டில் தூக்குதண்டனையை எதிர்நோக்குகிரான்.
அவனின் கூட்டாளியின் மரணத்திற்கு அவனையே குற்றவாளியாக நீதிமன்றம் தீர்மானித்து விட்டது,


இனி அவனை காப்பாற்ற இறந்தவனின் மனைவியின் மன்னிப்பினால் மட்டுமே முடியும்,
இறந்தவன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு இந்து,
அவனின் மனைவி எங்கே இருக்கிறாள் அவளின் விலாசம் என்ன?
எங்கேயோ ஒரு ராஜஸ்தான் வறண்ட பிரதேசத்தில் இருக்கும் இறந்தவனின் மனைவியை குளிர்ந்த இமாச்சல பிரதேசத்தில் இருந்து பயணமாகிறாள் அவள்
ராஜஸ்தான் செல்லும் ஒரு  ஒரு லாரியில் தொற்றி கொண்டு  பயணமாகிறாள்.
ஏராளமான முயற்சிகளுக்கு பின்பு ஜீனத் அந்த இளம் விதைவை பெண்ண மீராவை சந்திக்கிறாள்.

மீராவுக்கு எந்த விபரமும் சொல்லாமல் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்து தங்குகிறாள் ஜீனத்!
ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு வரும் மீராவை பார்த்துக்கொண்டே படிப்படியாக  அருகில் சென்று அவளோடு நட்பு பழகுகிறாள்.

தூக்கு தண்டனைக்கான நாளும் நெருங்கி கொண்டே இருக்கிறது,
எப்படி மீராவிடம் தன்னைபற்றிய உண்மையை சொல்லி அவளிடம் மன்னிப்பு கடிதம் வாங்குவது என்று ஜீனத்துக்கு வழி தெரியவில்லை,
மீராவோ ராஜஸ்தானில் ஒரு பாரம்பரிய குடும்பத்தில் விதவை மருமகளாக காலத்தை ஒட்டிக் கொண்டு   இருக்கிறாள்.  அவளுக்கு   வாழ்கையை பற்றி எதுவும் தெரிவதற்கு முன்பே வாழ்வு முடிந்து போய்விட்டிருந்தது,
வாழ்ந்து கெட்டுப்போன ராஜஸ்தான் ஜாமீன் குடும்பத்தின் பழைய அரண்மனை போன்ற வீட்டின் மீது அடைமானமாக வாங்கிய பணத்தை எப்படி செலுத்துவது என்று மீராவின் புகுந்த வீட்டார் கவலை பட்டு கொண்டிருந்தனர்.
அவர்களின் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவருவான் என்று நம்பிய அவர்களின் மகன் சவுதியில் பல்கனியில் இருந்து விழுந்து மரணமானான்.
அதில் ஜீனத்தின் கணவன் மீது வீணான சந்தேகம்..
இது ஒன்றுமே தெரியாமல் மீரா ஜீனத்தொடு மிகவும் பாசமாக நேரம் போவதே தெரியாமல் தனது கவலைகளை கொஞ்சமாவது மறந்து கொண்டு காலத்தை ஒட்டுகிறாள்.
ஜீனதுக்கு எப்படி பேசுவது என்று தெரியாமல் திணறி திணறி ஒருநாள் விபரம் முழுவதையும் கக்கி விடுகிறாள்.
ராஜஸ்தான் பாலைவனத்தின்  வெட்ட வெளிகள் போலவே மீராவின் வாழ்வும் வறண்டு போய்விட்டிருந்தது,
பாரம்பரிய குடும்ப கவுரவத்தை பேணி காக்கும் மீராவின் புகுந்த வீட்டார் கடன்காரர்களால் அவதிபட்டு கொண்டிருந்தனர்,
அதில் ஒரு பெரிய கடன்காரன் தனது கடனுக்கு விலையாக மீராவை கேட்டான், மீராவின் மாமனாரும் சம்மதிதார்.

ஜீனத்தின் கன்னத்தில் அறைந்து கோபத்துடன் அவளின் மன்னிப்பு பத்திரங்களை பாலைவன புழுதியில் தூக்கி எறிந்துவிட்டு வந்து விட்டாள்.

மீராவின் மாமியாரின்  வயோதிப தாயார் மீராவின் காதில்  மெதுவாக  மீராவை   அவர்கள்  வாங்கிய  
கடனுக்கு  தாரைவார்க்கக  தீர்மானித்த   விடயத்தை  பற்றி கிசுகிசுத்தாள்.
அப்பொழுதுதான் மீராவுக்கு  தன்னிலை என்னவென்று புரிய தொடங்கியது,
தானே வெறும் ஒரு உயிரற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது எப்படி இரக்கமே இல்லாமல்  ஜீனத்தின் நிலையை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் இருந்துவிட்டோமே என்று பதறினாள்.

உண்மையில் தனது நிலையும் ஜீனத்தின் நிலையம் ஒன்றுதான் என்று உணர்ந்தாள்.
இரவு இருட்டில் மெதுவாக வீட்டை விட்டு வெளியேறி ஜீனத்தின் குடிசையை நோக்கி ஓடினாள். அங்கு ஜீனத்தை காணவில்லை,
பின்பு தான் கசக்கி எறிந்த  மன்னிப்பு பத்திரத்தை பாலைவன புழுதியில் தேடி எடுத்து கொண்டு ரயில் நிலையத்தை நோக்கி ஓடினாள்.
ஜீனத் ஒருவேளை புறப்பட்டு போய் இருப்பாளோ என்று எண்ணியவண்ணம் ஓடினாள்.
எல்லாவிதமான நம்பிக்கையும் இழந்து  உடைந்து நொறுங்கி போய் ரயிலில் ஏறி உட்கார்ந்து ஒரு ஓரத்தில் எந்தவித உயிர்த்துடிப்பும் இன்றி இறந்து கொண்டிருந்தாள் ஜீனத்,

ஓடிவந்த மீராவை இம்முறை பிரபஞ்சம் ஏமாற்றவில்லை...ஜீனத்தை கண்டுவிட்டாள்...
மீரா மன்னிப்பு பத்திரத்தை நீட்டினாள்..
கதவின் ஓரம் கைநீட்டி அதை ஜீனத் வாங்கினாள்...அவளால் பேசவே முடியவில்லை கண்ணீர் ஆறாக ஓடிகொண்டே இருந்தது,
ரயில் புறபட்டது..

ஏக்கத்துடன் புறப்படும் ரயிலை கண்ணீரோடு  பார்த்து கையசைத்து கொண்டிருந்தாள் மீரா..
ரயில் கண்ணுக்குள் மறையும் முன்பு ஜீனத்தின் கை மீராவை நோக்கி வாவென்று அழைத்தது...
ஒரு கணம் ஒரே ஒரு கணம்....எல்லாவித தளைகளில் இருந்தும் விடுதலை...அது சாதாரண ஜீனத்தின் கைகளல்ல ...

மீராவின் நம்பிக்கைக்கு உரிய ஒரே ஒரு ஜீவனின் கை என்பதை தன்னை அறியாமலே உணர்ந்த மீரா தனது பர்தா தலையை மீறி விலகுவதை கூட கவனிக்காமல் ரயிலை நோக்கி ஓடிச்சென்று  ஜீனத்தின் கைகளை பற்றி ரயிலில் ஏறி கொண்டாள்.

ராஜஸ்தான் பாலைவனத்தை விட்டு இமாச்சல பிரதேசத்தை நோக்கி ரயில் புறப்பட்டது.
இந்த படத்தின் கதை இந்து முஸ்லிம் சமய பின்னணியின் குழப்பங்களையே முக்கிய கருவாக கொண்டிருக்கிறது, ஆனால் அதன் காரம் கொஞ்சம் கூட தெரியாதவாறு ஒரு அழகான கவிதை அல்லது ஒரு மென்மையான இசை போன்று படமாக்க பட்டுள்ளது,
கத்தி மேல் நடக்கும் சமாசாரத்த்தை பூக்களின் மேல் நடக்கும் யாத்திரையாக உருவாக்கியமைதான் இத்திரைப்படத்தின் சிறப்பு,

கோபமும் பழிவாங்குதலும் இயல்பாக உருவாக கூடிய சிக்கல் நிறைந்த ஒரு கதையை எவ்வளவு மென்மையான உணர்வுகளுடன் கூடிய அழகான கனவு போல உருவாக்கி உள்ளார்கள்?
இருவேறு மாநிலங்களின் மண்வாசம் இசைவாசம் எல்லாம் இப்படத்தை ஒரு மறக்க முடியாத படமாக்கி விட்டது,

இது உண்மையில் முதலில் மலையாளத்தில் பெருமழைகாலம் என்ற பெயரில் உருவானது. அதுவும் நன்றாகவே இருந்தது, ஆனாலும் அதைவிட இதில் சில பெரிய மாற்றங்களை செய்துள்ளார்கள். இரண்டும் நல்ல படங்கள்தான் .
எனினும் மலையாளத்தில் கொஞ்சம் காரமும் கண்ணீரும் இருந்தது ஆனால் இந்தியில் இருந்த கவிதையும் மென்மையும் என்னை கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணிவிட்டது