Tuesday, December 29, 2015

His Highness Abdulla ஒரு அனந்தன் நம்பூதிரி பிராமணன் எப்படி ஒரு அப்துல்லாவாக முடியும்....


His Highness Abdulla ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா ..தொண்ணுறுகளில் வெளியாகிய மிக நல்ல மலையாள திரைப்படம்.
வாரிசு இல்லாத ஒரு  அரசுகுடும்ப  தலைவரை(நெடு முடி வேணு )  கொன்று
அவரது சொத்துக்களை  பங்கு போடதுடிக்கும்   உறவினர்கள் ஒரு வாடகை  கொலையாளியை மும்பையில்  இருந்து  வரவழைக்கின்றனர்,
இங்கேதான் பெரிய தவறு நடந்து விட்டது. வந்தவன்  ஒரு கொலையாளியே அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலையால் பணத்தேவை கருதி  கொலை தொழிலுக்கு புதிதாக வந்துவிட்ட ஒரு மென்மையான இசைகலைஞன் அவன், அனந்தன் நம்பூதிரி என்ற பெயரில் வந்த அவனின் உண்மயான பெயர் அப்துல்லா என்பதாகும்
அவனால் வாக்குறுதி அளித்த படி அரசரை கொல்ல முடியவில்லை.
சங்கீத பிரியரான  அரசர்  இவனின் சங்கீதத்தில் மயங்கி விட்டார்,
கொல்லவந்தவன் உறவினர்களிடம் பேசி அவர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறான் .
அவர்கள் தற்போது தாங்களே அரசரை கொன்று விட்டு பழியை கூலிக்கு வந்த கொலைகாரன் அனந்தன் நம்பூதிரி  மீது பழியை போட தீர்மானித்தனர்,
கொல்லவந்த  அனந்தன் நம்பூதிரி வீட்டை விட்டு ஓடினால் அரசரை உறவினர்களே கொன்றுவிட்டு சுலபமாக பழியை அனந்தன் நம்பூதிரி  மீது போட்டு விடமுடியும்,
கொஞ்ச நாள் பழக்கத்தில் அரசர் மீது நெருங்கி பழகியதால் அரசரை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் அனந்தன் நம்பூதிரி  நிலை பெரும் கேள்வி குறியாகிவிட்டது .
இதற்கிடையில் அரசருக்கோ அனந்தன் நம்பூதிரி என்ற பெயரில் வந்தவனின் உண்மை பெயர் அப்துல்லா  என்றும் அவன் தன்னை கொலைசெய்வதற்கு வந்த கொலையாளிதான் என்று அறிந்து  அதிர்ந்து போகிறார்,

Saturday, December 26, 2015

Dor தோர் .அது சாதாரண ஜீனத்தின் கைகளல்ல....


Dor தோர் ! இமாச்சல பிரதேசத்தின் பச்சை புல்வெளிகள் மலைகள்
பள்ளத்தாக்குகள்...எந்த ரசனை அற்ற கடோர்கஜனையும் மயங்க வைக்கும் இயற்கை அழகு அந்த மாநிலத்திற்கு பிரபஞ்சம் அளவுக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறது, அங்கே உள்ள ஒரு சின்னஞ்சிறு தம்பதிகளின் வாழ்வில் அடித்தது மிகபெரும் புயல்.
சவுதி அரேபியாவுக்கு சென்ற அவளின் ( ஜீனத்) கணவன் செய்யாத ஒரு கொலைகுற்றச்சாட்டில் தூக்குதண்டனையை எதிர்நோக்குகிரான்.
அவனின் கூட்டாளியின் மரணத்திற்கு அவனையே குற்றவாளியாக நீதிமன்றம் தீர்மானித்து விட்டது,
இனி அவனை காப்பாற்ற இறந்தவனின் மனைவியின் மன்னிப்பினால் மட்டுமே முடியும்,
இறந்தவன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு இந்து, அவனின் மனைவி எங்கே இருக்கிறாள் அவளின் விலாசம் என்ன?
எங்கே ஒரு இமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் இறந்தவனின் மனைவியை தேடி கிடைத்த ஒரு லாரியில் ராஜஸ்தான் பயணமாகிறாள்.
ஏராளமான முயற்சிகளுக்கு பின்பு ஜீனத் அந்த இளம் விதைவை பெண்ண மீராவை சந்திக்கிறாள்.
மீராவுக்கு எந்த விபரமும் சொல்லாமல் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்து தங்குகிறாள். ஜீனத் தினசரி வரும் கோவில்லுக்கு அருகில் சென்று அவளோடு நட்பு பழகுகிறாள்.

Wednesday, December 16, 2015

Idanazhiyil oru Kaalocha இடநாழியில் ஒரு காலோச்சா...... திருப்பங்களில் எல்லாம் ஒரு கவிதைத் தன்மை..

இந்த மலையாள திரைப்படம் மிக பெரிய வெற்றி படம் .
எனகென்னவோ இந்த படம் உரிய முறையில்  கவுரவிக்க படவில்லை என்றே கருதுகிறேன். தேசிய விருதுகள் பெற்றிருக்க வேண்டிய படம் ஏனோ பெறவில்லை.
ஜெயபாரதி,  சோமன், திலகன், கார்த்திகா, வினீத், நிழல்கள் ரவி, ஆடூர் பாசி மற்றும் பலர் நடித்த இதன் இயக்குனர் பத்ரன் ,
பழம்பெரும் இசையமைப்பாள தக்ஷணாமூர்த்தியின் மிக மிக அற்புதமான இசையில் இது உருவானது.
ஒரு படத்திற்கு பின்னணி இசை எவ்வளதூரம் உயிரை கொடுக்கும் என்பதை இந்திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது,

பதினைந்து வருஷங்களுக்கு முன்பு கோபித்து கொண்டு போய்விட்ட கணவன்.
மனசுக்குள்ளே வருஷங்களாக அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணின் சோகத்தை கண்களில் தேக்கி உணர்ச்சி பிழம்பாக ஆனால் மௌனமாக காட்சி தரும் ஜெயபாரதியின் முகம் யாராலும் மறக்கவே முடியாது ,
அவரது கண்களில் ஒரு  உயிர் அழுகின்ற ஓசை படம் பார்ப்பவர்கள்
எல்லோரினதும் மனதையும் நிச்சயம் ஊடுருவும் .
பிரிந்து போன கணவன் மகனை முதல் முதலாக கண்ட பொழுது அம்மைக்கு சுகமானு என்று கேட்டதை மகன் வினீத் மிக சாதரணமாக ஜெயபாரதியிடம் கூறும் காட்சி......
ஜெயபாரதியிடம் ஒரு எரிமலை பொங்கி எழுகிறது....அம்மைக்கு சுகமாணு?
ஓர் ஆயிரம் கேள்விகள் கேட்க துடிக்கும் கண்ணகி போல அவள் வெடிக்கிறாள்...
பதினைந்து வருஷங்களாக ஒரு தபால் கூட போடாத கணவன் இன்று தனது நலம் விசாரிப்பதை அவளால் தாங்கவே முடியவில்லை....
அமுங்கி போயிருந்த கோபம்.....
ஜெயபாரதியின் கண்களோடு போட்டி போடும் தக்ஷனாமூர்த்தியின் இசை. 
தக்ஷனாமூர்த்தியின் இசையில் எவ்வளவு தூரம் உணர்சிகள் பேசும் என்பதை என்னால் எழுதிக்காட்ட முடியவில்லை.
ஒற்றை காலில் சதங்கை அணிந்து ஜெயபாரதியின் கால்கள் கணவனை பேசும் காட்சி... அதற்கு உயிர் கொடுக்கும் இந்தோள ராகம்.

Saturday, November 28, 2015

The English Patient கொதிக்கும் பாலைவன சுடுமணலில் உறங்காமல்.....அவள்....போராடி.....


The English Patient இரண்டாவது உலக யுத்தம் முடியும் நேரம்
இத்தாலிய நாட்டின் யுத்த களத்தில் திரைப்படத்தின் கதை நடக்கிறது.
 இத்தாலியிலும் துனிசியாவிலும் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் ஒரு அமெரிக்க பிரித்தானிய கூட்டு தயாரிப்பாகும்.
இதன் கதை இதே தலைப்பில் வெளிவந்த  மிக பிரபபமான ஒரு நாவலாகும். இதற்கு புலிட்சர் பரிசும் கிடைத்தது ,
இதன் ஆசிரியர் இலங்கையை சேர்ந்த மைக்கல் ஒண்டாச்சி என்பவராகும், இவர் இலங்கை பரங்கி இனத்தவராகும் மட்டக்களப்பில் உள்ள ஒண்டாச்சி மடம் என்ற கிராமம் தஞ்சாவூரிலும் உள்ளது, இவரின் மூதாதையர் தஞ்சாவூரை சேர்ந்தவர்களும் ஒல்லாந்து தேசத்தவர்களும் ஆவார்கள். இவர் கனடாவில் மிகவும் பிரபலமான ஒரு ஆசிரியர் எழுத்தாளர் பதிப்பாளர்
திரைப்பட ஆர்வலர் என்று இவரை பற்றி அடிக்கி கொண்டே போகலாம்,

இந்த திரைப்படம் இதன் மூலபிரதியில் இருந்து மிகவும் சவாலான கட்டங்களை தாண்டியே திரைக்கதை உருவத்தை எடுத்தது,
மிகவும் பாரதூரமான சம்பவங்களை இது உள்ளடக்கி இருக்கிறது,
ஒருபுறம் இரண்டாவது உலக யுத்தம் ஏற்படுத்தி விட்டு போன அவலம் சந்தேகம் ஆபத்து போட்டி பொறாமை வஞ்சம் ...அடுத்த செக்கன் என்ன நடக்கும் யார் எதிரி யார் நண்பன் என்று ஐரோப்பா முழுவதும் யுத்த கள நிலைமைகள் அப்படியே இன்னும் மாறாமல் இருந்தமை ஒருபுறம்,
காயப்பட்ட ராணுவத்தினர் பொதுமக்கள்  மற்றும் யுத்தகைதி பரிமாற்றம் மறுபுறம்.
யுத்தத்தில் யார் யார் என்னென்ன இலாபம் பெற்றார்கள் என்னன்ன தோல்விகள் காயங்கள் பெற்றார்கள் என்று யாருக்குமே தெளிவாக தெரியவில்லை, எல்லா மனிதர்களிடமும் ரகசியங்கள் ஏராளம் இருந்தன. எல்லோரும் எல்லோருக்கும் ஓரளவு பயந்தார்கள்.
எல்லா திசைகளிலும் அழிவுகள் சேதம் அவலங்களே காணப்பட்டான.;குண்டுகளால் சிதைவடைந்த ஒரு தேவாலயத்தில் உள்ள இத்தாலிய தாதி சேவை செய்துவருகிறார்,
அவர் பெயர் ஹன்னா. அவரிடம்  முக்கால் வாசி  நெருப்பால் எரிந்து போன ஒரு நோயாளியை இத்தாலிய ராணுவத்தினர் ஒப்படைத்தனர் .
அந்த பெயர் தெரியாத  நோயாளி ஒரு ஜெர்மன் உளவாளியாக இருக்க கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு.
அந்த நோயாளி ஆங்கிலம் பேசினார் எனவே அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர்  English Patient.

Monday, November 9, 2015

Chicago... நீதிமன்றம் ...தீர்ப்பு....சட்டம்.....கவர்ச்சி....விளம்பரம்.....பத்திரிகைகள்.....எல்லாமே நாடகம்தான்? டேக் இட் ஈசி!

Chicago won six Academy Awards in 2003, including Best Picture. The film was critically lauded, and was the first musical to win Best Picture since 1969.The film is based on the 1975 Broadway musical, which ran for 936 performances
Chicago சிகாகோ ! இத்திரைப்படத்தை பற்றி
எழுதும்போதே மிகவும் உற்சாகமாக இருக்கிறதுஇது  ஒரு Broadway ஷோ சம்பந்தப்பட்ட கதை.
படம் பார்க்கும் போது  நாம்  ப்ராட்வே  ஷோவில்  ஒரு நாட்டிய நாடகம் போன்று  அதாவது  மானாட மயிலாட  பாணி நிகழ்ச்சியை  பார்க்கும் உணர்வு வருகிறது,
இத்திரைப்படத்தின்  கதை ஒரு ஒரு பெண் கைதிகளுக்கான சிறைச்சாலையில்தான் பெரும்பாலும் நகர்கிறது,
இரு வேறு வேறு கொலை குற்ற சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு  சிறைக்குள் வந்து சேர்கிறார்கள் இரு இளம் அழகான நாட்டியகாரிகளும் Rene Zellwagger, Catherina Zeta Jones .
அவர்களுக்கு ஒத்தாசை புரியும்  Queen Latifaa ஊழல்  பெண் ஜெயில் வார்டன்.
அவர் சிபார்சில் வந்து சேர்ந்த  Richard Gerry கில்லாடி வக்கீல்.

இவர்களின் கொலைகள்  லேசுப்பட்டதல்ல .   இவர்களின் குற்ற பின்னணியின் கடுமையை குறைப்பதற்கு  முதலில் மக்களையும் பத்திரிக்கைகளையும் ஏமாற்றவேண்டும் . அதற்காக கில்லாடி வக்கீல்  அளக்கும் கதைகள் நாடகங்கள் மிகவும் சுவாரசியமானவை,.
அந்த  ஜெயிலில் பலவிதமான குற்றங்களை செய்த நூற்று கணக்கான பெண்கைதிகள்  இருந்தார்கள்.
பணம் இருந்தால் எப்படியும் சாதகமான தீர்ப்பை பெற்று வெளியே வரலாம் என்பதை ஓரளவு வெளிப்படையாக காட்டி
இருக்கிறார்கள்.  ஒரு அப்பாவி ஹங்கேரிய பெண் தூக்கில் இடப்படும் காட்சி மிகவும் வேதனையானது.
அதைகூட ஒரு நாட்டிய நாடக பாணியில் காட்டிஇருப்பது மிகவும் ஒரு அற்புதமான கலைவெளிப்பாடு என்றுதான் கூறவேண்டும், நவரசங்களையும் பாட்டு நடனமாகவே காட்டி இருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பாகும். அதனாலதானோ என்னவோ ஆறு ஆஸ்கார் பரிசுகளையும் அளப்பெரிய வசூலையும் இது குவித்தது,
அந்த ஜெயிலில் பணம் இருந்தால் எதையும் செய்யலாம். பணம் இல்லாவிடில் உங்களுக்கு எதுவும் நடக்கலாம் 1975 இல் கதை நடப்பதாக காட்டப்பட்டு உள்ளது .  இன்றும் கூட இதுதான் நிலைமை ..அதைதான் இந்த படம் நையாண்டியாக காட்டி உள்ளது .அதனாலே இது  ஒருவகையில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்த படம்தான்,

Saturday, November 7, 2015

Heart and Souls கணக்குகள் முடியுமுன்னே வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது சிலருக்கு....இல்லை இல்லை எல்லோருக்கும்தான்


இந்த திரைப்படத்தை பார்பதற்கு  உண்மையில் மிகவும் கொடுத்து வைத்திருக்கவேண்டும் . இது மனிதர்களின் எத்தனையோ அடிப்படை கேள்விகளுக்கு மிக சவாலான ஒரு படமாகும். இன்னும் சரியாக சொல்லப்போனால் எந்த புத்தகத்திலும் எந்த ஞானியும் சொல்ல முடியாத அளவு பிறப்பு, இறப்பு, வாழ்க்கை, பிரபஞ்சம் எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம்  விலாவாரியாக விளங்க வைக்க முயற்சிக்கிறது.
எனது அனுபவத்தில் இது என்னுள் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படம். இந்த உலகில் நாம் எப்படி வந்தோம்? எப்படி போகப்போகிறோம்? எங்கே போகப்போகிறோம்? எப்படி வாழவேண்டும்? இந்த வாழ்வின் அற்புதம்தான் என்ன?
கதை என்னவோ இறந்தவர்களை பற்றிதான் ஆனால் மிகவும் உயிர்த்துடிப்புள்ள படம்.
கணவன் இன்றியே தனது மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் ஒரு  தாய்
தனது இரவு வேலைக்கு செல்கிறாள். அவள் ஒரு பேரூந்தில் ஏறுகிறாள்.
அந்த பேருந்தில் வேறு ஒரு நடுத்ததர வயது பாடகன் ஒருவனும் ஏறுகிறான் . அவனோ தன்னம்பிக்கை இல்லாதவன். பெரிய மண்டபத்தில் நடக்கபோகும் ஒத்திகைக்கு சமுகம் அளிக்க பயந்து தப்பி ஓடிவந்து பேருந்தில் ஏறியவன் .
வேறு ஒரு பெண் அதில் ஏறுகிறாள். அவளோ தனது காதலன் கேட்டும் வேலையை விட்டு அவனோடு செல்ல மறுத்து பின்பு அது தவறு என்று எண்ணிக்கொண்டே இதே பேருந்தில் ஏறுகிறாள்.
நாலாவது நபர் ஒரு திருடன், ஒரு சிறுவனை ஏமாற்றி அவனது பழைய பெறுமதி வாய்ந்த முத்திரைகளை திருடி விற்று விட்டான். பின்பு அதை
திருப்பி எடுத்து அந்த சிறுவனிடம் கொடுக்க எண்ணிக்கொண்டே பேருந்தில் ஏறுகிறான்.
இந்த நான்கு பயணிகளோடு பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அதன் சாரதி அருகில் வந்து கொண்டிருந்த வேறு ஒரு காரில் உள்ள பெண்ணை ரசித்து பார்த்துக்கொண்டே வந்து வேறு ஒரு காரோடு மோதி விடுகிறான் .பேருந்து தாறுமாறாக ஓடி பாலத்தில் மோதி கீழே விழுந்து நொறுங்கி விடுகிறது .

Thursday, November 5, 2015

Chocolat - Chocolaterie MAYA.. மனித வாழ்வு ஓரு சொக்கலேட்டு போல...ரசிக்கவேண்டும்...


“Life is what you celebrate. All of it. Even its end.”
 A woman and her daughter open a chocolate shop in a small French village that shakes up the rigid morality of the community.
சொக்கலேட் மிகவும் அழகான ஆனால் புரட்சிகரமான திரைப்படம் . இரண்டாவது உலக
யுத்தம் முடிந்து சுமார் பதினைந்து வருடங்களுக்கு பின்பு இன்னும் பழமையை கைவிடாத ஒரு பிரெஞ்சு கிராமத்தை சுற்றி கதை செல்கிறது. அந்த கிராமத்தில் மிகவும் பழம் வாய்ந்த ஒரு நபராக தேவாலயத்தின் பாதிரியார்..அவரை பின்னணியில் இருந்து இயக்கம் உள்ளூர் மேயர்..பாதிரியார் மூலமாக அந்த கிராமத்தில் ஏறக்குறைய ஒரு சர்வாதிகாரி மாதிரி இருக்கிறார்.இவர்களின் வழிகாட்டல்களை அல்லது போதனைகளை தவிர சுயமாக எதையுமே சிந்திக்காத எதுவுமே தெரியாத கிராமத்து மக்கள்.

இந்த கிராமதிற்கு ஒரு நாள் ஒரு பெண் தனது சிறிய மகனோடு வருகிறார்.அவர் அங்கு ஒரு கடையை வாடகைக்கு எடுத்து தனது சொக்கலட் கடையை ஆரம்பிக்கிறார். அதுவரை அந்த மக்களுக்கு சொக்கலட் என்றால் என்னவென்றே தெரியாது. எதுவித பொழுதுபோக்குகளும் சுவாரசியமும் அற்ற அந்த கிராமத்துக்கு அந்த சொக்கலேட் கடையும் அதை நடத்தும் அந்த பெண்ணும் மிகபெரும் கவர்ச்சி பொருள் ஆகின்றனர், அந்த கிராமக்களின் கவனம் சொக்கலேட்டை நோக்கி போவதை விரும்பாத பழமைவாத பாதிரியும் மேயரும் அதை ஒரு சாத்தானின் வரவாக சித்தரிக்கின்றனர். சதா ஒரு சீரியசான முகத்தோடு உலகத்தையே தனது தலையில் சுமப்பது போன்று எதற்கும் ஒரு கட்டுப்பாடு ஒழுக்கம் சட்டம் என்று மக்களை ஒரு இறுக்கத்தில் வைத்திருக்கும் மேயருக்கு நாள் போக போக மக்கள் தற்போதெல்லாம் தேவாலய நிகழ்சிகளை விட சொக்கலேட்டை அதிகம் விரும்புகிறார்கள் என்ற எண்ணம் வரத்தொடங்கி விட்டது. மெதுவாக சொக்கலேட் கடை க்கும் அதை நடத்தும் பெண்ணை பற்றியும் மக்களுக்கு வெறுப்பு வருமாறு செய்வதற்கு பலவிதமான பிரசார உத்திகளை கையாளுகிறார்.

மக்கள் யுத்தத்தின் வடுக்களில் இருந்து இன்னும் விடுபடாமல் இருக்கும் பொழுது இந்த மாதிரி சொக்கலேட் கடை எல்லாம் ஒரு அவமானம் ...அவளும் தந்தை பெயர் தெரியாத அவளது மகனும் ஒரு வெட்கம் தரும் விடயம் என்றெல்லாம் கயிறு திரித்து பார்க்கிறார்.

Tuesday, November 3, 2015

Gone With The Wind என்னைவிட...ஏன் உன்னையும் விட நீ நேசித்தது இந்த மண்ணைத்தான் ! நாளை காலை விடியும் போது அது ஒரு புது நாள்....தாரா..


Gone With The Wind  கோன் வித் த வின்ட் ...இது  1939 வெளியான ஹாலிவூட் திரைக்காவியம், இதுவரை இதன் வசூல் சாதனையை வேறு ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை. அதாவது   $3,440,000,000  டொலர்கள் வசூலித்தது இன்னும் இதன் வியாபாரம் டிவிக்களிலும் டிவிடிக்களாலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
மார்கிரட் மிச்சல் என்ற பெண்மணியால் எழுதப்பட்ட ஒரே ஒரு நாவல் இதுதான் இது புலிட்சர் பரிசு பெற்றது . இது மிகப்பெரிய படமாகும் இதன் மூலப்பிரதியான நாவலும் மிகவும் பெரியதாகும், இதன் கதையை சுருக்கமாக காட்டுவது கூட மிகவும் கடினமாகும்,  இதைபடமாக்க MGM Panavision போன்ற பெரிய நிறுவனங்கள் தயங்கி கொண்டிருந்த வெளியில்  டேவிட் சொல்செனிக் என்ற ஒரு தயாரிப்பாளர் முன்வந்தார். சுமார் இரண்டுவருடங்கள்  பலவித இன்னல்களையும் சோதனைகளையும் தாண்டவேண்டி இருந்தது. படப்பிடிப்ப்பு நடந்த சில காலத்திலேயே இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில்  வேற்றுமை அதிகமாகி இயக்குனர் சென்றுவிட்டார்.பின்பு  விக்டர் பிளெமிங் என்ற ஒரு இயக்குனரை கொண்டு பெரும்பகுதி படத்தை எடுத்து முடித்தார்கள்.
இதன் படப்பிடிப்பு அந்த காலத்திலேயே மிகவும் நேர்த்தியுடன் எடுக்கப்பட்டது. படத்தில் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட விடயம் அதன் வர்ண சேர்க்கையாகும். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்பு திருப்தி இல்லாததால் எடுக்கப்பட்ட பிலிம் மேல் மீண்டும் வர்ணங்கள் சேர்க்கப்பட்டன .இது அந்த காலத்தில் மிகவும் அற்புதமாக பரீட்சித்து பார்த்து வெற்றி அளிக்கப்பட்ட தொழில்நுட்பமாகும் .

Monday, October 26, 2015

Andha Naal சுயமாக சிந்திக்க தெரிந்தவனுக்கு இந்தியாவில் என்னவேலை... அன்று மட்டுமா....இன்றும் இதுதான் நிலைமை...

ஏ வி எம்மின் அந்தநாள் 1954 இல் வெளியாது. இதன் கதையை எழுதி இயக்கியது  வீணை எஸ்.பாலச்சந்தர். வசனம் ஜவஹர் சீதாராமன்,ஒளிப்பதிவும் மாருதிராவ், தயாரிப்பு ஏவி மெய்யப்ப செட்டியார்.இதில் பாட்டுக்கள் இல்லை.பின்னணி இசையை ஏவிஎம்மின் சரஸ்வதி இசைகுழுவே மேற்கொண்டது. 
அந்த காலத்தில் மட்டும் அல்ல இன்றும் கூட மிகவும் சிந்திக்க வேண்டிய கருத்துக்களை இந்த படம் முன்வைத்தது.  இது படமாக்கிய விதமோ உண்மையில் ஒரு சர்வதேச தரத்தில் இருந்தது.  அந்த காலத்தில் அவ்வளவு தூரம்  முன்னேறியிருந்த  தமிழ் சினிமா  உலகம் பின்பு  ஏனோ  பின்தங்கி விட்டது.
மகாத்மா காந்தியின் சுதேசி போராட்டத்தில் மறைக்கபட்டிருந்த பல வரலாற்று உண்மைகளை இந்த படம் தொட்டிருக்கிறது.
ஒரு திரைப்படம் மக்களுக்கு சரியான பாதையை சரியான வரலாற்றை
காட்டவேண்டும் என்ற சமுக நோக்கில் இந்த படம் அன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய புரட்சி படம் என்றுதான் சொல்லவேண்டும்.
அன்றைய சமுகத்தில் நிலவி வந்த போலி தேசாபிமானம் அல்லது குருட்டு தேச பக்தி எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டியது.
தேசபக்தி கூச்சல் போடப்பட்ட அன்றைய காலகட்டத்தில் அது உண்மையில் வெறும் வேஷம்தான் என்பதை இந்த திரைப்படம் ஒன்றுதான் அன்று வெளிச்சம் போட்டு காட்டியது .அந்த வகையில் இது ஒரு வரலாற்று ஆவணமாகும்,
11 October 1943 அன்று இரவு ஜப்பான் சென்னை மீது குண்டு வீசியது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பின்னப்பட்டதுதான் கதை,
அன்று திருவல்லிகேணியில் மிகவும் துடிப்புள்ள ஒரு ரேடியோ என்ஜினியர்.இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கும் மலிவான விலையில் ரேடியோ செய்ய முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்.ஆனால் அவருக்கு பக்கபலமாக அன்று யாருமே இல்லை.இதனால் வெறுப்படைந்த அந்த இளைஞர் எடுத்த அடுத்த அடி..மிகவும் புரட்சிகரமானது அல்லது சர்ச்சைக்கு இடமானது. அவர்   துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார் ! அவர்தான் கதையின் நாயகன்.அவர் எப்படி கொல்லப்பட்டார் ஏன் கொல்லப்பட்டார். என்பதை சுற்றி பல Flashback காட்சிகளால் கதை நகர்கிறது இல்லை இல்லை ஓடுகிறது.

Friday, October 16, 2015

City of Joy அவலம் நிறைந்த ஒரு சேரியில்...அழகான மனிதம்...வெடித்த ஒரு புரட்சி! Patrick Swayze, Om Puri and Shabana Azmi.

City of Joy ஒரு இளம் அமெரிக்க டாக்டருக்கு  ஆபரேஷன் தியேட்டரில் கிடைத்த ஒரு அதிர்ச்சி! ஒரு   சிறுவனுக்கு ஆபரேஷன் செய்தார் ஆனால் அவன் கண்முன்னேயே இறந்துவிட்டான். சோகம் தாங்க முடியாத அந்த டாக்டர் (Patrick Swayze) ஒரு ஆத்மீக தேடலை நோக்கி இந்தியா வருகிறார், அதுவும் கல்கத்தாவுக்கு.
அங்கே அவர் கண்டது சந்தித்தது.....ஆத்மீகம் தேடியவருக்கு கிடைத்தது ஏமாற்றம் ..துன்பம்... துரோகம்.. வறுமை.
அவரை சிந்திக்கவே விடாமல் விதி  கல்கத்தாவின் சேரியில் கொண்டு போய் சேர்த்துவிட்டது.
கையில் உள்ள காசையும்  பாஸ்போர்ட்டையும் பறித்துக்கொண்டு அடித்து நொறுக்கியது குண்டர் கூட்டம்.
பிகாரில் கந்துவட்டி காரரிடம் தனது நிலத்தை பறிகொடுத்துவிட்டு பஞ்சம் பிழைக்க வந்த ஹன்சாரியும் அவனது மனைவியும்  மட்டுமே கூக்குரல் கேட்டு ஓடி வந்தனர்.
நினைவு மயங்கி இருந்த டாக்டர் மக்சை தங்களது குடிசைக்கு தூக்கி சென்று ஒரு வெள்ளைக்கார நர்சிடம் Joan Bethel சேர்த்தனர்.

மனித வாழ்வின் அவலத்தை கண்டு அதை விட்டு விலகி விடஎண்ணியவருக்கு அது முடியவில்லை.அவரின் சேவை அங்கு மிகவும் தேவையாக இருந்தது. அதையும் விட அந்த மக்களின் வாழ்வோடு அவரை அறியாமலேயே அவர் கொஞ்சம் நெருங்கிவிட்டார்.
அந்த மக்கள் கொடூரமான முதலாளிகளினதும் மக்களை பற்றி கொஞ்சம் கூட கவனிக்காத அரசாங்கங்களின் பாராமுகத்தாலும் ஒரு பிராணிகள் போன்று அந்த சேரியில் வாழ்ந்தார்கள்.

Thursday, October 15, 2015

Being There வார்த்தைகளை தாண்டிய ஒரு உலகம்! காட்சிகளை மீறிய ஒரு உண்மை!Peter Sellers Shirley MacLaine

Being There  இது 1979 வெளிவந்த ஆங்கில படம். இந்த திரைப்படம் மிகவும் சவாலான ஒரு கதையை மிகவும் நுட்பமாக கையாண்டு வெற்றி பெற்றது. புகழின் உச்சியில் இருந்த பீற்றர் செல்லர்ஸ், ஷேர்லி மக்களீன் மைக்கல் டக்லஸ் போன்றவர்கள் நடித்தது. ஒரு பெரிய பணக்காரர் இறந்து விடுகிறார்.அவரின் வீட்டு தோட்டத்தை கவனித்து வந்த ஒரு விதமான மனிதரின் கதைதான் இது. அந்த தோட்டக்காரர் கார்டனர் என்றே தன்னை குறிப்பிடுகிறார்.வீட்டுக்காரர் இறந்ததும் வேறு ஊரில் இருந்த அவரின் வாரிசுகள் வந்து வீட்டை பொறுப்பெடுக்கும் பொழுது இந்த கார்டனருக்கு செலுத்த வேண்டிய பணம் பற்றிய பேச்சு வரும்போது தனக்கும் இந்த வீட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிவிட்டு.தனது ஆடைகளை மட்டும் எடுத்துகொண்டு அடுத்த நேர வாழ்வைப்பற்றி எதுவித சிந்தனையும் இன்றி வெளியேறுகிறார். அந்த பணக்காரரின் ஆடைகளை அணியும் உரிமையை அவர் இவருக்கு கொடுத்திருந்தார். அந்த வீட்டை விட்டு மிகவும் விலை உயர்ந்த கோட்சூட் அணிந்து இவர் போவதை பார்த்தால் இவர் ஒரு வெறும் மனிதர் என்று யாருக்கும் தோன்றாது.
இந்த கார்டனர் எதுவித சிந்தனைகளும் அற்ற ஒரு ஞானி போல தோன்றும் ஒரு சாதாரண மனிதராவர்.இதுவரை வெளியுலகம் எதுவும் தெரியாமல் தன்னை பற்றியும் எதுவும் தெரியாமல் ஒரு அப்பாவி அல்லது ஒரு சித்த புருஷன் போல் வாழ்ந்தவர்.இனி அந்த வீட்டில் தனது இருப்பு முடிந்து போய்விட்டது என்பதை ஏற்று கொண்டு வீட்டுக்கு வெளியே வந்த அவருக்கு வெளி உலகம் புதிது புதிதாக அனுபவங்களை அல்லது படிப்பினைகளை காட்ட தொடங்கியது.
என்னதான் உலகம் அவரை நோக்கி வந்தாலும் அவரோ தனது தனது இருப்பில் தானாக தான் மட்டுமாகவே இருந்தார். உண்மையில் பிரபஞ்சம் இழுத்த இழுப்புக்கு இழுபட்டு கொண்டிருந்தார்.
ஒரு பணகாரியின் கார் வந்து அவரை மோதியது.
பின்பு அந்த பணக்காரியின் காதலையும் பெற்றார் ஆனால் அது அவருக்கு தெரியவே இல்லை.
அவளின் மரணப்படுக்கையில் இருக்கும் கணவனோ கார்டனரை தனது ஒப்புயர்வற்ற வழிகாட்டியாகவே கொண்டாட தொடங்கி விட்டார்.

Sunday, October 11, 2015

Chemmeen கருத்தம்மாவை தேடி கடலும் பரீக்குட்டியும் ஓயாமல் ஒலித்த........

Chemmeen மொழி கடந்து இனம் கடந்து நாடுகடந்து மனித மனங்களை உலுப்பி எடுத்த ஒரு மலையாள திரைக்காவியம்தான் செம்மீன் .
 மண்வாசம் கடல் வாசம் மீன்வாசம் எல்லாம் கலந்து காதல் வாசத்தையும்  சுமந்தது செம்மீன்.
அடிப்படையில் இது ஒரு புரட்சிப் படம்தான்.
மதத்தையும் பொருளாதார ஏற்ற தாழ்வுகளையும் மீறி வந்த காதல்.
அதுவும் வறுமை தாண்டவமாடிய  அந்த கடலோர கிராமத்து பின்புலத்தில்!
நிரந்தரமில்லாத மீனவ குடும்பங்களின்  வறுமை ஒருபுறம்.
அந்த வறுமையின் கோரப்பிடியில் இருந்து மீண்டுவர துடிக்கும் குடும்பத்தலைவன். அவன் தெரிவு செய்த மார்க்கமோ கொஞ்சம் சூதுவாது நிறைந்தது. அவன் சூட்சுமமாக மகள் கருத்தம்மாவின் காதலை மூலதனமாக பயன்படுத்துகிறான்,
இதுதான் துரோகத்தின் எல்லை. பாவம் பரீக்குட்டி!
சூழ்நிலை கைதி ஆகிவிட்ட கருத்தம்மா பழனிக்கு வாழ்க்கைப்படும் சோகம்,
அந்த சோகத்தை எண்ணி கண்ணீர் விட கூட உரிமையில்லாத வாழ்க்கை.
அவள் எப்படித்தான் வாழ முயற்சித்தாலும் கருதம்மாவையும் பழனியையும் நிம்மதியாக வாழவிடகூடாது என்று கங்கணம் கட்டி கொண்டிருக்கும் கிராமத்தவர்களின் தரம் குறைந்த பேச்சுகள்  பழனியின்  மனதில் சந்தேக நெருப்பை சதா மூடிக்கொண்டு இருக்கிறது,
இந்த நெருப்பை சமாளிக்க முடியாமல் தடுமாறும் கருத்தம்மா மறுபுறம் மறக்க முடியாத அந்த பரீக்குட்டியின்  நினைவுகளால் ஒவ்வொரு நிமிஷமும் வெந்து சாகிறாள்.

Saturday, October 10, 2015

mr and mrs iyer விபத்து போல வந்த உறவு பிரிந்தே போகவேண்டிய நியதி.......ஆனாலும்....

mr and mrs iyer  மிஸ்டர் அண்ட் மிசிஸ் அய்யர் என்ற படம் மனித உணர்வுகளை அதிகமாகவே கிளறி பார்த்துவிட்ட ஒரு திரைப்படமாகும்.
கையில் குழந்தையுடன் ரயிலில் ஒரு பெண்.
அறிமுகமே இல்லாத ஒரு ஆண்.
ரயில் போகும் பாதையில்  ஒரு யுத்தம்.
அதன் உஷ்ணம் இருவரையும் எங்கோ தள்ளி விடுகிறது,
தவிர்க்கவே முடியாத விதியின் சூறாவளியில் இருவரும்.
வருஷக்கணக்கில் நடக்கவேண்டிய விடயங்கள் ஓரிரு நாட்களிலேயே நடந்து விடுகிறது, எந்த இடத்தில் எவர் எவரில் தங்கி நிற்கவேண்டிய சூழ்நிலை உருவாகியது
என்று கண்டு பிடிக்க முடித்த வேகத்தில் விதி முடிச்சு போட்டு விடுகிறது.
ஒரு பக்கம் பயங்கரத்தின் எல்லையே கண்டுவிட்ட திகில்.
வாழ்வின் இறுதி என்பதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பார்ப்பவர் எவரும் நிச்சயம் கதி கலங்கிதான் போவார்கள். இதற்கு மீனாட்சியும் ஸௌத்திரியும்(முஸ்லிம்) விதிவிலக்கா என்ன?
பாரம்பரிய கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்தஆசார மீனாட்சியின் தலை எழுத்து சுதந்திர முற்போக்கு சிந்தனையுள்ள ஸௌத்திரியுடன்  வேறு வழியே இல்லாமல் சங்காத்தம் வைக்கவேண்டிய சூழ்நிலை.
பயந்து பயந்து அவனை தனது கணவன் என்று பொய்சொல்லி காப்பற்றவேண்டிய கட்டாயம்.
கண்முன்னே கொடூரத்தை பார்த்து நடுங்கிப்போன மீனாட்சிக்கு ஸௌத்திரியின் நெருக்கம் கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு.
இவற்றை எல்லாம் ஏதோ இருவரின் சொந்த வாழ்க்கையை பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

What the bleep do we know? பிரபஞ்சம்/கடவுள்/ஆத்மா! அதை பற்றி எங்களுக்கு என்னதான் தெரியும்?

இந்தப்படம் மிகவும் சவாலான கற்பனையும் கலையும் சேர்ந்த விவரண படமாகும்.
ஏராளமான விமர்சனங்களையும் அதற்கு நிகரான பாராட்டுக்களையும் பெற்று  வசூலிலும் வெற்றி பெற்ற ஒரு அதிசய படமாகும்.
விஞ்ஞானிகளின் கடுமையான விமர்சனம் அதே சமயம் பாராட்டுகள் என்று இரண்டு விதமான கருத்துக்களும் இருந்தாலும் பார்வையாளர்களின்
கோணத்தில் இது ஒரு பெரும் சேவையை செய்த படம் என்று இதை கூறலாம்.
Quantum Science or Quantum Mechanics என்று படித்தவர்களாலேயே  விளங்க முடியாத ஒரு விடயத்தை சாதாரண சினிமா ரசிகர்களுக்கும் விளங்க வைக்கும் முயற்சியை இது செய்தது,
பிரபஞ்சம் அல்லது கடவுள் போன்ற பதில் காண முடியாத கேள்விகள் ஒரு பெண்ணின் மனதில் அலைமோதியது.
அவரோ காது கேளாதவர் அவரின் மௌன உலகத்தில் நாம் சாதரணமாக காணும் காட்சிகள் அவருக்கு கொஞ்சம் வித்தியசாமாக தோன்றியதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.
நாம் காணும் காட்சிகள் உண்மையில் அங்கு நிதர்சனமாக உள்ள காட்சிகள்தானா?
காணும் காட்சிகள் நாம் காண்பதாலேயே அவை காட்சிகள் ஆகின்றனவா? உண்மையில் அங்கு ஒன்றுமே இல்லையா?
இது போன்ற கேள்விகள் உங்கள் தலையை சுற்ற செய்யும்.
அழகான இந்த பிரபஞ்சம் அழகாக இருப்பதற்கும் அல்லது அழகில்லாமல் இருபதற்கும் அதை பார்க்கும் நாம் தான் காரணமா?
 இவையெல்லாம் வெறும் அறிவியல் கேள்விகளும் அதற்கு பதில் தேடும் முயற்சிகளும் ஆகும்,
ஆனால் இந்த அறிவியல் சமாசாரங்களை அழகான ஒரு திரைப்படமாக படம் பிடித்து காட்டுவது சாதாரண விடயம் அல்ல.
உங்கள் எண்ணங்கள் தான் பௌதீக ரகசியம் என்ற கருத்தை கற்பனை கதா பாத்திரங்கள் காட்சிகள்  மூலம் ஒரு கவிதையாக காட்டிஉள்ளார்கள்.
செவிப்புலன் அற்ற  ஒரு பெண்  படப்பிடிப்பாளர் கதையை எடுத்து செல்கிறார்.
அவர் காணும் இந்த பிரபஞ்சதின்  அழகு  ஏன்  நமக்கு தெரிவது இல்லை?
அவரின் பார்வையில் உள்ள  விஷேச தன்மைதான் என்ன?
இன்னும் என்னனவோ விடயங்களை விளங்க வைக்கும் பெரிய முயற்சியை இத்திரைப்படம் முன்னெடுத்திருக்கிறது..
நாம் யார்? எங்கே போகிறோம்? என்பது பற்றியெல்லாம் எமது விடை காண முடியாத கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக புதிய புதிய கேள்விகளை கேட்டு எமது அறிவுக்கு அசல் தீனியை இத்திரைப்படம் தந்திருக்கிறது.
நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

Friday, October 9, 2015

Dasvidaniya ஓடிகொண்டே இருந்தவன் ஒருநாள்

Dasvidaniya  ஓடிக்கொண்டே இருந்தவன் திடீரென்று  ஓட்டத்தை
நிறுத்தவேண்டிய நிலைக்கு ஆளானான். அப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது அடடே  இவ்வளவு  காலமாக அவன்  ஓடிகொண்டே  இருந்திருக்கிறான், வேறு என்னதான் செய்தான்? எல்லாமே செய்தான் ஆனால் அவனுக்காக அவன் எதுவுமே செய்யவில்லை.
இந்த வாழ்வு முடியப்போகிறதே என்று அவன் கவலைப்படுவது ஒரு பெரிய
ஜோக்.

ஏனென்றால் அவன் இதுவரை வாழவே இல்லை, வெறுமனே ஓடிகொண்டல்லவா இருந்திருக்கிறான்?
வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒருவன் தன்வாழ்வு முடியப்போகிறதே என்று கவலை கொண்டால் அதில் நியாயம் இருக்கும்.ஆனால் இவன்தான் வாழவே இல்லையே இல்லாத வாழ்க்கை இனி இருந்தென்ன போயென்ன?

இந்த  பிரமாண்டமான கேள்வி அவனை நோக்கி புயலாக அடித்தது,
இனி என்ன செய்யலாம் ?
வாழ்ந்து பார்க்கலாமே?
வாழ்ந்தானா?
அவனுக்கும் எத்தனையோ கனவுகள் இருந்தன. அன்றாட பிரச்சனைகளில் அவன் ஓடிகொண்டே இருந்தான், நாற்பதை கடந்தும்  தனிக்கட்டையாகவே இருந்தான்.
வயோதிப அம்மா ...வாட்டி பிழிந்து எடுக்கும் முதலாளி....வீட்டுக்கும் நாட்டுக்கும் வேலை இடத்து நண்பர்களுக்கும் எல்லோருக்குமே நல்லவன்.
அவன் இந்த வாழ்வை விரும்பி இருந்தானா இல்லையா என்ற கேள்வியும் யாரும் கேட்கவில்லை அவனும் தன்னை தானும் கேட்கவில்லை.
ஓட்டத்திற்கு ஒருநாள் காலக்கெடு விதிக்கப்பட்டது!
ஆடிப்போனவன் முகத்துக்கு நேரே ஒரு கேள்வி கணை வந்து பாய்ந்தது.
வாழ்க்கையை பற்றிய கவலை வாழ்பவர்களுக்கு அல்லவா வரவேண்டும்?
நீதானே வாழவே இல்லையே? ஓடிகொண்டல்லவா இருக்கிறாய்?
உனக்கேன் அந்த கவலை?
ஓட்டம் நிற்கவேண்டிய நேரத்தில் வாழ்ந்து பார்க்க முடியுமா?
முயற்சிதான்!

Fire ! மௌனமாக அடிவாங்கியவர்கள் முதல்முறையாக பேசினார்கள்!

Fire  திரைப்படம் 1996 இல் வெளியானது. கனடா வாழ் இந்திய பெண்மணியான தீபா மெஹ்தா என்பவரால் இயக்கி தயாரிக்கப்பட்டது.
இத்திரைப்படம் இந்தியாவில் பெரும் எதிர்ப்புக்களை எதிர்கொண்டது, திரை அரங்குகள் தீவைத்து கொழுத்தப்பட்டன, படுமோசமான ஒரு சமூகவிரோத திரைப்படம் போன்று எல்லா சமயத்தினரும் இந்த திரைப்படத்தை குத்தி கிளறினார். அவர்களின் கோபத்தை
இவ்வளவு மோசமாக தூண்டிவிடும் அளவு என்னதான் இத்திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டது?
யாராலும் அதிகம் பேசப்படாமல் மறைத்து மறைத்து வைக்கப்பட்ட ஒரு பெரிய உண்மையை இந்த திரைப்படம் போட்டு உடைத்துவிட்டது.
இந்த fire முதலில் கொழுத்த தொடங்கியது சமய அடிப்படைவாதிகளைத்தான், இந்த சமய அடிப்படைவாதிகள் கலாசாரத்தை தங்கள் துணைக்கு அழைத்து கொண்டார்கள்.
இந்திய கலாச்சாரமும் இறைபக்தியும் தங்கள் தலைமேல்தான் இருப்பதாக எண்ணி கொண்டிருந்த இந்த காவலர்கள் இந்த படத்தை பார்த்து பயந்தார்கள் என்பதே உண்மை,
அப்படி பயப்படுவதற்கு காரணமும் இருந்தது,
எந்த எந்த பொய்களையெல்லாம் பெண்கள் மேல் ஏற்றி வைத்து சவாரி செய்தார்களோ அந்த பொய்கள் எல்லாம் வெறும் மண்கோட்டைகள் போன்று தூள் தூள் ஆக்கிவிடும் வலிமை இந்த Fire படத்துக்கு இருந்ததை அவர்கள் சரியாகவே இனம் கண்டு கொண்டார்கள்.
எங்கே பெண்கள் தங்களை தூக்கி எறிந்து விடுவார்களோ என்று பயப்படும் ஒவ்வொரு ஆணும் இந்த படத்தை பார்த்து பயந்தான் என்பது ஒன்றும் மிகை படுத்தப்பட்ட வாசகம் அல்ல.
பெண்களை அன்பினால் அல்லாது, அவர்களை உண்மையில் ஒரு அடிமையாகவே வைத்திருக்கும் கலாசாரத்தில் ஊறி போயிருக்கும் சராசரி மனிதானால் Fire படம் ஏற்படுத்திய உஷ்ணம் தாங்க முடியாமல் போய்விட்டது.
இந்த படம் காமத்தை கொஞ்சம் யதார்த்த விடயமாகவே காட்டியது. இது அவர்களின் முதல் பிரச்சனை அல்லது முதல் பயம்,
காமம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது. பெண்களுக்கு அது இருந்தால் அவள் நடத்தை கெட்டவள் போன்று கருதப்படவேண்டும்.
பெண் தனது காமத்தை எண்ணி  பயந்து வெட்கப்பட்டு மிகவும் ஒரு கீழ்த்தரமான குணமாக எண்ணி குற்ற உணர்வுடனேயே இருக்க வேண்டும்.